முதுநிலை இன்ஜி., படிப்பு வரும், 24 முதல் விண்ணப்பம்

சென்னை:'எம்.இ., - எம்.டெக்., உள்ளிட்ட படிப்புகளுக்கு, வரும், 24ம் தேதி முதல், 'ஆன்லைனில்' விண்ணப்பிக்கலாம்' என, அண்ணா பல்கலை அறிவித்துள்ளது.

அண்ணா பல்கலை இணைப்பு அந்தஸ்து பெற்றுள்ள, இன்ஜினியரிங் கல்லுாரிகளில், முதுநிலை படிப்பில் மாணவர் சேர்க்கைக்கு, கவுன்சிலிங் நடத்தப்படுகிறது.இந்த கவுன்சிலிங்கில் பங்கேற்கும் மாணவர்களுக்கு, தமிழக அரசின் சார்பில், 'டான்செட்' பொது நுழைவு தேர்வு நடத்தப்படுகிறது.இந்த ஆண்டு தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, முதுநிலை இன்ஜினியரிங் மாணவர் சேர்க்கை கவுன்சிலிங் அறிவிக்கப்பட்டுள்ளது. எம்.இ., - எம்.டெக்., - எம்.ஆர்க்., - எம்.பிளான் போன்ற படிப்புகளுக்கு, மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர்.இதில் பங்கேற்க உள்ள மாணவர்கள், 24ம் தேதி முதல், ஆன்லைன் வாயிலாக, ஆகஸ்ட், 5க்குள் விண்ணப்பிக்க வேண்டும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.இதற்கான விபரங்களை, அண்ணா பல்கலையின் இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.