ஆசிரியர் தகுதித் தேர்வில் முதல் தாளைப் போன்று இரண்டாம் தாளும் கடினமாக இருந்ததாக, தேர்வர்கள் தெரிவித்தனர். இந்தத் தேர்வின் முடிவுகள் ஒரு மாதத்தில் வெளியிடப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தலைவர் வெங்கடேஷ் கூறினார்.
அரசு
மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் ஆசிரியர்களாகப் பணியாற்ற "டெட்' எனப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இந்த நிலையில், இடைநிலை ஆசிரியர்களுக்கான முதல் தாள் தேர்வு தமிழகம் முழுவதும் சனிக்கிழமை நடைபெற்றது. இதையடுத்து, ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பணியாற்றும் ஆசிரியர்களுக்கான இரண்டாம் தாள் தேர்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது
32 மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள 1,081 மையங்களில் நடைபெற்ற இந்தத் தேர்வில் நான்கு லட்சத்து 20 ஆயிரத்து 815 தேர்வர்கள் பங்கேற்றனர். தேர்வு 10 மணிக்குத் தொடங்கியபோதும் காலை 8 மணி முதலே தேர்வு மையங்களின் முன்பு தேர்வர்கள் காத்திருந்தனர்.
வினாத்தாள் குறித்து சென்னையைச் சேர்ந்த தேர்வர்கள் கே.லட்சுமிப்பிரியா, டி.ஆர். மோகனா, பி.அருள்முருகன் உள்ளிட்டோர் கூறியது: ஆசிரியர் தகுதித் தேர்வின் இரண்டாம் தாளில் சமூகவியல், அறிவியல்- கணிதம் என இரு பிரிவுகளில் தேர்வு நடைபெற்றது. சமூகவியல் பாடத்தில் பொருளாதாரம், புவியியல், குடிமையியல், வரலாறு சார்ந்த வினாக்களும், அறிவியல்-கணிதம் பிரிவில் இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், கணிதம் ஆகிய பிரிவுகளிலும் வினாக்கள் இடம்பெற்றிருந்தன. அதேவேளையில் இரு பிரிவுகளுக்கும் தமிழ், ஆங்கிலம், உளவியல் பாடங்களில் மட்டும் ஒரே மாதிரியாக கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன. தேர்வின் மொத்த மதிப்பெண்கள் 150 ஆகும்.
என்னென்ன வினாக்கள்?: நோட்டாவை அறிமுகப்படுத்தியதில் உலக அளவில் இந்தியா எத்தனையாவது நாடு, இந்திய அரசியலமைப்பில் எந்தப் பகுதி தேர்தல் ஆணையத்தைப் பற்றிக் கூறுகிறது, சரக்கு-சேவை வரி நடைமுறைப்படுத்தப்பட்ட நாள், பிரிட்டிஷ் இந்தியாவில் முதல் பொதுத்தேர்தல் நடைபெற்ற ஆண்டு, "நாளும் கிழமையும் நலிந்தோருக்கு இல்லை ஞாயிற்றுக்கிழமையும் பெண்களுக்கு இல்லை' என புதுக்கவிதையை எழுதியவர் யார் என பல்வேறு வினாக்கள் கேட்கப்பட்டிருந்தன. தமிழ், ஆங்கில பாடங்களில் இடம்பெற்ற கேள்விகள் சற்று எளிதாக இருந்தன. ஆனால் கணிதம், அறிவியல், உளவியல் வினாக்கள் பாடப்பகுதியின் உள்ளிருந்து கேட்கப்பட்டிருந்தன. பல கேள்விகளுக்கு யோசித்து பதில் எழுத வேண்டியிருந்தது. ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது தேர்வு கடினமாகவே இருந்தது என்றனர்.
தேர்வு மையத்தில் ஆய்வு: சென்னை அசோக்நகர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்த தேர்வை ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தலைவர் வெங்கடேஷ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.