இன்ஜி., கவுன்சிலிங் வழிமுறைகள் அறிவிப்பு

சென்னை:இன்ஜினியரிங் கவுன்சிலிங்கில், கல்லுாரியின் விருப்ப பதிவுக்கான வழிமுறைகளை, உயர் கல்வித்துறை வெளியிட்டுள்ளது.

பிளஸ் 2 முடித்த மாணவர்கள், இன்ஜினியரிங் படிப்பில் சேருவதற்கான, தமிழக அரசின் கவுன்சிலிங்கை, தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் நடத்துகிறது. இந்த ஆண்டு, 1.73 லட்சம் இடங்களுக்கு, 1.33 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இதற்கான சான்றிதழ் சரிபார்ப்பு, ஜூன், 7ல் துவங்கி, நேற்றுடன் முடிந்தது. விண்ணப்பித்தவர்களில், 90 சதவீதம் பேர், சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்றுள்ளனர்.
அடுத்து வரும், 17ம் தேதி தரவரிசை பட்டியல் வெளியிடப்பட உள்ளது. இந்த பட்டியலில், மாணவர்களின் பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில், 'கட் -- ஆப்' நிர்ணயிக்கப்பட்டு, தரவரிசை நிர்ணயிக்கப்படும். அதன் அடிப்படையில், ஜாதி வாரியான இட ஒதுக்கீட்டு விதிகளின் படி, இன்ஜினியரிங் இடங்கள் ஒதுக்கப்படும்.
இந்த கவுன்சிலிங்கில், பொது பாடப்பிரிவு மாணவர்களுக்கு மட்டும், ஆன்லைனில் கவுன்சிலிங் நடத்தப்படுகிறது. இதற்குரிய மாணவர்கள், தங்களுக்கு விருப்பமான கல்லுாரி மற்றும் பாடப் பிரிவுகளை, முன்னுரிமை அடிப்படையில், ஆன்லைனில் வரிசையாக பதிவு செய்யலாம்.ஒரு மாணவர், எத்தனை கல்லுாரிகள், பாட பிரிவுகளை வேண்டுமானாலும் பதிவு செய்யலாம்.

ஆனால், விருப்ப பதிவில், ஒன்று, இரண்டு என்ற வரிசை அடிப்படையில், காலியாக உள்ள கல்லுாரி மற்றும் இடம் ஒதுக்கப்படும். இந்த ஒதுக்கீடு, தர வரிசை அடிப்படையில், கணினி முறையில் தானியங்கி, 'சாப்ட்வேர்' வழியாக ஒதுக்கப்படும்.எனவே, மாணவர்கள், தங்களின் விருப்பமான கல்லுாரி மற்றும் பாட பிரிவுகளை பதிவு செய்யும் முறைகள் குறித்து, தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம், வீடியோ பதிவேற்றம் செய்துள்ளது. மாணவர்கள் மற்றும் பெற்றோர், https://tneaonline.in/ என்ற இணையதளத்தில், விபரங்களை தெரிந்து கொள்ளலாம்.