அரசு பள்ளிக்கு இலவச வேன் வசதி

ஈரோடு : மாணவர்கள் எண்ணிக்கை சரிவால், அரசுப் பள்ளிகள் மூடப்படுவதை தவிர்க்க, ஈரோடு அருகே, முன்னாள் மாணவர்கள் இணைந்து, அறக்கட்டளை துவங்கினர். இதன்
மூலம், இரு வேன்களை வாங்கி, கிராமப்புற மாணவர்களை தினமும் இலவசமாக, பள்ளிக்கு அழைத்து செல்கின்றனர்.ஈரோடு மாவட்டம், பாசூர் அரசு மேல்நிலைப் பள்ளி, முன்னாள் மாணவர்கள் ஒன்றிணைந்து, 'பாசூர் அரசு மேல்நிலைப் பள்ளி, முன்னாள் மாணவர்கள் அறக்கட்டளை' துவங்கினர். இதன்மூலம் பள்ளி மாணவ - மாணவியரை அழைத்து வர, இலவச வேன் சேவை துவங்கியுள்ளனர்.

இது குறித்து, அறக்கட்டளை மேலாளரான எலக்ட்ரீஷியன் சங்கர், ௩௪, கூறியதாவது:பாசூர், அரசு மேல்நிலைப் பள்ளி, 1962ல் துவங்கியது. கடந்தாண்டு, 168 பேர் படித்தனர். மாணவர் எண்ணிக்கை, 100க்கும் குறைவாக சென்றால், பள்ளி மூடப்படும் நிலை ஏற்பட்டது.இதனால், பள்ளியின் முன்னாள் மாணவர்கள், சந்தித்தோம். போக்குவரத்து வசதி இல்லாததால், மாணவர்கள் எண்ணிக்கை சரிவது தெரிந்தது. இதையடுத்து, மாணவ - மாணவியரை, வீட்டில் இருந்து பள்ளிக்கு அழைத்து வர, இலவச வேன் வசதி செய்ய முடிவு செய்தோம். அப்போது, சந்திப்பில் ஈடுபட்ட அனைவரும், ஒரு தொகையை செலுத்தி, எய்ஷர் வேன் ஒன்று வாங்கினோம்.மார்ச் மாதம் முதல், இந்த வேனை இயக்க தொடங்கினோம்.

இந்த வேனில், பாசூரை சுற்றி, 13 கி.மீ., வரை சென்று, மாணவ - மாணவியர் அழைத்து வந்தோம்.நடப்பாண்டில், நாமக்கல் மாவட்ட மாணவ - மாணவியரும் பள்ளியில் சேர்ந்துள்ளனர். இதனால், நாமக்கல் மாவட்டத்தில், 50 கி.மீ., வரை சென்று வரும் வகையில், ஜூன், ௩ முதல் மற்றொரு எய்ஷர் வேனை இயக்கி வருகிறோம்.இரு வாகனங்களும், அறக்கட்டளை மூலம், 12 லட்சம் ரூபாய் மதிப்பில் வாங்கப்பட்டுள்ளன. மற்றொரு வேன் வாங்கும் எண்ணமும் உள்ளது. எங்கள் சேவையை அறிந்து, பள்ளிக்கல்வி பாதுகாப்பு இயக்கத்தினர், தேவையான உதவிகள் செய்வதாக உறுதி அளித்துள்ளனர்.

மேல்நிலைப் பள்ளி அருகேயுள்ள, அரசு துவக்க பள்ளி மாணவர்களையும், வேனில் அழைத்து வருகிறோம். அறக்கட்டளையில் தற்போது, ௬௦ பேர் உள்ளனர். தகவல் கேள்விப்பட்டு, முன்னாள் மாணவர்கள் தொடர்பு கொண்டு வருகின்றனர். இவ்வாறு, அவர் கூறினார்.இவர்களை பாராட்ட, ௮௩௪௪௪ - ௭௩௭௭௭ என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.