முதல் தலைமுறை பட்டதாரி சான்று பெற வழிமுறை என்ன?

சென்னை: முதல் தலைமுறை பட்டதாரி, சான்றிதழ் பெறும் வழிமுறைகளை, தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழகத்தில், பிளஸ் 2 முடித்து, உயர்கல்வியில் சேரும் மாணவர்களில், முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு, கல்வி கட்டணத்தில் சலுகை வழங்கப்படுகிறது.இன்ஜினியரிங், மருத்துவம், பல் மருத்துவம், கால்நடை, வேளாண்மை மற்றும் சட்டம் உள்ளிட்ட முக்கிய படிப்புகளுக்கு, இந்த சலுகை வழங்கப்படும் என, ஏற்கனவே தமிழக அரசு அறிவித்துள்ளது.இந்த திட்டம், 2011 முதல் அமலில் உள்ளது. பிளஸ் 2 முடித்து, உயர்கல்வியில் சேரும் மாணவர்கள், முதல் தலைமுறை பட்டதாரிக்கான சான்றிதழை, வருவாய் துறையில் பெற வேண்டும்.தாய், தந்தை இருவரும், இதுவரைபட்டப்படிப்பு முடிக்காமல் இருந்தால், அவர்களின் பிள்ளைகள் உயர்கல்வியில் சேரும் போது, முதல் தலைமுறை பட்டதாரி மாணவர்களாக கணக்கில்எடுக்கப்படுவர்.

இதில், பெற்றோர் பட்டதாரிகளாக இல்லாமல், குடும்பத்தில்உள்ள சகோதரர் அல்லது சகோதரி யாராவது பட்டப்படிப்பு முடித்தால், அப்போது, முதல் தலைமுறை பட்டதாரி சான்றிதழ்கிடைக்காது.அதேநேரத்தில், சகோதரர் அல்லது சகோதரியில் யாராவது ஒருவர், பட்டப் படிப்பு படித்து கொண்டிருந்தால், அப்போது, சம்பந்தப்பட்ட மாணவர், முதல் தலைமுறை பட்டதாரியாக சான்றிதழ்பெறலாம்.ஆனால், பல தாசில்தார் அலுவலகங்களில், இது போன்று வந்த விண்ணப்பங்களில் முடிவு எடுக்காமல், சான்றிதழ் கொடுக்காமல் இழுத்தடிக்கின்றனர்.
இது குறித்து, அரசுக்கு புகார்கள் சென்றதால், உயர்கல்வி துறை சார்பில், வருவாய் துறைக்குஅறிவுறுத்தல்கள் அனுப்பப்பட்டுள்ளன.பெற்றோர் பட்டதாரிகளாக இல்லாமல் இருந்து, குடும்பத்தில் உள்ள மற்ற சகோதர -- சகோதரிகளில், யாராவது பட்டப்படிப்பை முடிக்காமல், படித்து கொண்டிருக்கலாம்.அப்போது, அவர்களின் சகோதர - சகோதரிகளுக்கு, முதல் தலைமுறை பட்டதாரி சான்றிதழ்வழங்கப்படும்.அவர்கள், பட்டம் படித்து முடித்து விட்டால், முதல் தலைமுறை பட்டதாரி சான்றிதழ் கிடைக்காது என, உயர்கல்வி தரப்பில் ஆலோசனை கூறப்பட்டுள்ளது.