மாணவர்கள் தற்கொலை கூடாது; மாற்றுத்திறனாளியின் தன்னம்பிக்கை

கரூர் : ''மீண்டும் தேர்வெழுத வாய்ப்பு இருப்பதால் 'நீட்' தேர்வு முடிவால் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ள வேண்டாம்'' என தேசிய அளவில் ஐந்தாமிடம் பிடித்த மாற்றுத்திறனாளி மாணவர் கூறினார்.


மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவு தேர்வு முடிவுகள் நேற்று முன்தினம் வெளியாகின.இதில் கரூரைச் சேர்ந்த கார்வண்ண பிரபு 572 மதிப்பெண் பெற்று மாற்றுத் திறனாளிகள் பிரிவில் தேசிய அளவில் ஐந்தாம் இடமும்; மாநில அளவில் முதலிடம் பிடித்துள்ளார்.

கார்வண்ண பிரபு 18, கூறியதாவது: மாற்றுத் திறனாளியான நான் கரூரில் தனியார் பள்ளி ஒன்றில் மாநில பாட திட்டத்தில் 10ம் வகுப்பு படித்தேன். பின் நாமக்கல்லில் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் பிளஸ் 2 படித்தேன். அதில் 500க்கு 476 மதிப்பெண்கள் எடுத்தேன். நீட் தேர்வுக்கு என எந்த பயிற்சி வகுப்பிலும் சேரவில்லை. பள்ளியில் அளித்த பயிற்சியை வைத்தே தேர்வு எழுதினேன். அதில் 572 மதிப்பெண்கள் பெற்றேன்.

எதிர்காலத்தில் மனநல மருத்துவராக வர வேண்டும் என்பதே லட்சியம். நீட் தேர்வில் குறைவான மதிப்பெண் பெற்றுள்ள மாணவர்களில் சிலர் தற்கொலை செய்து கொள்வது வருத்தம் அளிக்கிறது. நீட் தேர்வை இன்னும் இரண்டு முறை எழுத வாய்ப்பு இருக்கிறது. மீண்டும் முயற்சி செய்தால் வெற்றி நிச்சயம், என்றார்.