இந்த ஆண்டே சித்தா, ஆயுர்வேத படிப்புகளுக்கும் நீட் தேர்வு கட்டாயமாகிறது: அமைச்சர் விஜயபாஸ்கர்

சென்னை: நடப்பு கல்வியாண்டு முதலே சித்தா, ஆயுர்வேத படிப்புகளுக்கும் நீட் தேர்வு கட்டாயமாகிறது என்று தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர்
தெரிவித்துள்ளார்.
எம்பிபிஎஸ் படிப்பைத் தொடர்ந்து தமிழகத்தில் இந்த ஆண்டு முதல் சித்தா, ஆயுர்வேதா உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளுக்கும் நீட் மதிப்பெண் அடிப்படையிலேயே மாணவ சேர்க்கை நடைபெறும் என்று சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் கூறினார்.
எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட அலோபதி மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நீட் தேர்வு மூலம் நடைபெறுகிறது. இந்நிலையில் சித்தா, ஹோமியோபதி, யுனானி, ஆயுர்வேதம் உள்ளிட்ட பாரம்பரிய மருத்துவப் படிப்புகளுக்கும் நீட் கட்டாயம் என மத்திய அரசு அறிவித்தது.
அதற்கான சுற்றறிக்கையை கடந்த ஆண்டே ஆயுஷ் அமைச்சகம் அனைத்து மாநிலங்களுக்கும் அனுப்பியது. ஆனால், இந்திய மருத்துவக் கவுன்சில் சட்டம் 1970-இல் இடம்பெற்றுள்ள ஒரு ஷரத்தில் பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் பாரம்பரிய மருத்துவப் படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை நடத்தலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, அந்த ஷரத்தை காரணமாகக் காட்டி கடந்த ஆண்டில் பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையிலேயே தமிழகத்தில் மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டது. ஆனால் அதன் பின்னர், மருத்துவக் கவுன்சில் சட்டத்தில் சில திருத்தங்கள் கொண்டுவரப்பட்டன. இதனால், நிகழாண்டில் நீட் தேர்வு மூலமாக மட்டுமே பாரம்பரிய மருத்துவப் படிப்புகளுக்கும் மாணவர் சேர்க்கையை நடத்த வேண்டும் என்ற சூழல் உருவானது.
சித்தா, யுனானி, ஆயுர்வேதம், ஹோமியோபதி ஆகிய பாரம்பரிய மருத்துவப் படிப்புகளுக்கு நீட் தேர்வு அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும் என மத்திய ஆயுஷ் அமைச்சகம் சுற்றறிக்கை அனுப்பியது. அதற்கு தமிழக அரசு ஆட்சேபம் தெரிவித்ததுடன், வழக்கம்போல பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையிலேயே இங்கு மாணவர் சேர்க்கை நடத்த அனுமதிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டிருந்ததால், இதுவரை தமிழகத்தின் நிலைப்பாடு குறித்து தெளிவான அறிவிப்பு வெளியாகாமல் இருந்தது.
இந்த நிலையில், இந்த ஆண்டு முதல் சித்தா, ஆயுர்வேதா உள்ளிட்ட படிப்புகளுக்கும் நீட் தேர்வு அடிப்படையிலேயே மாணவ சேர்க்கை நடத்தப்படும் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவித்துள்ளார்.