எல்.கே.ஜி., யு.கே.ஜி.,யில் மாண்டிசோரி கல்வி: தொடக்க கல்வித்துறை முடிவு

சிவகங்கை: அங்கன்வாடி மையங்களில் துவக்க உள்ள எல்.கே.ஜி., யு.கே.ஜி., மாணவர்களுக்கு மாண்டிசோரி கல்வி முறையில் பாடங்கள் நடத்த தொடக்க கல்வித்துறை முடிவு செய்துள்ளது.


ஊராட்சி ஒன்றியம், நகராட்சி, அரசு நடுநிலைப்பள்ளிகளில் இயங்கும் 2,381 அங்கன்வாடி மையங்களில் முன்னோடி திட்டமாக இக்கல்வி ஆண்டு முதல் எல்.கே.ஜி., மற்றும் யு.கே.ஜி., வகுப்புகள் துவக்கப்பட்டுள்ளன. இதற்கான மாணவர் சேர்க்கை, ஆசிரியர் விபரங்களை கல்வி தகவல் இணையதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளனர். இங்கு எல்.கே.ஜி., யு.கே.ஜி., வகுப்பில் சேரும் மாணவர்களுக்கு மாண்டிச்சோரி கல்வி முறையில் பாடங்கள் நடத்த ஆசிரியர்களை அரசு தயார்படுத்தி வருகிறது.

இது குறித்து கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: எல்.கே.ஜி., யு.கே.ஜி.,யில் மாண்டிசோரி கல்வி முறை வகுப்பு நடத்த மாவட்டத்திற்கு இரண்டு முதன்மை கருத்தாளர்கள் வீதம் தேர்வு செய்துள்ளோம். அவர்களுக்கு ஜூன் 6 முதல் 8 ம் தேதி வரை சென்னையில் சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது. அங்கன்வாடி மைய எல்.கே.ஜி., யு.கே.ஜி., ஆசிரியர்களுக்கு, முதன்மை கருத்தாளர்கள் பயிற்சி அளிப்பர், என்றார்.