டி.இ.டி., தேர்வில் ஆரம்பமே குளறுபடி கடைசி நேரத்தில் சுதாரித்த அதிகாரிகள்

மதுரை:ஆசிரியர் தகுதி தேர்வுக்கான (டி.இ.டி.,) விடைத்தாள் (ஓ.எம்.ஆர்., ஷீட்) அனுப்பியதில் குளறுபடி ஏற்பட்டது. கடைசி நேரத்தில் அவை திரும்ப பெறப்பட்டு மாவட்ட வாரியாக மீண்டும் அனுப்பப்பட்டன.

ஆசிரியர் பயிற்சி முடித்த மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு டி.இ.டி., தேர்வு நாளை, நாளை மறுநாள் நடக்கிறது. இதில் 5.90 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். தேர்வை கண்காணிக்க மாவட்டம் தோறும் கல்வித்துறை அதிகாரிகளை ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,) நியமித்துள்ளது. மதுரைக்கு தொடக்க கல்வி இயக்குனர் குப்புசாமி 'நோடல்' அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
தேர்வர்கள் பதிவெண் பட்டியல், அனுமதி சீட்டு, விடைத்தாள் அடங்கிய கவர்கள் கல்வி மாவட்டம் வாரியாக அனுப்பி வைக்கப்பட்டன. இதில் விடைத்தாள் கவர்கள் மாற்றி அனுப்பப்பட்டன. உதாரணமாக மதுரை மையத்திற்கான விடைத்தாள் சிவகாசி, சிவகங்கைக்கு சென்றன.
இதுகுறித்து கல்வி அதிகாரிகள் கூறியதாவது:கடைசியாக நடந்த ஆசிரியர் தகுதி தேர்வு அடிப்படையில் மாவட்ட குறியீட்டு எண் குறிப்பிட்டு விடைத்தாட்களை டி.ஆர்.பி., அனுப்பியது. ஆனால் கடந்த ஆண்டு கல்வி மாவட்ட எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டது. இதற்கான புதிய எண்கள் ஒதுக்கப்பட்டும் பழைய எண் அடிப்படையில் அனுப்பப்பட்டன.
இதனால் அவை பிற கல்வி மாவட்டங்களுக்கு சென்று குழப்பத்தை ஏற்படுத்தின. கடைசி நேரத்தில் இது சரிசெய்யப்பட்டது. தேர்வு நடத்த தயார் நிலையில் உள்ளோம், என்றார்.