மதுரை மருத்துவக் கல்லுாரியில் மேற்படிப்புக்கு கூடுதல் 'சீட்'

மதுரை:மதுரை அரசு மருத்துவக் கல்லுாரியில் மேலும் இரு மேற்படிப்புகளுக்கு கூடுதல் இடங்களை ஒதுக்கி இந்திய மருத்துவ கவுன்சில் உத்தரவிட்டுள்ளது.

மதுரை அரசு மருத்துவக் கல்லுாரியில் 10 வகையான சிறப்பு மேற்படிப்புகளுக்கும் இடங்களை அதிகரித்து வழங்க கோரிக்கை விடுக்கப்பட்டது. இருகட்ட ஆய்வு நடத்திய இந்திய மருத்துவக் கவுன்சில் எட்டு மேற்படிப்புகளுக்கு இடங்களை அதிகரித்தது.அதன்படி டி.எம்., படிப்பில் இரைப்பை குடலியல் மருத்துவ பிரிவுக்கு 2, சிறுநீரகவியல் பிரிவுக்கு 4, புற்றுநோயியல் பிரிவுக்கு 2, இதயவியல் பிரிவுக்கு 5, நரம்பியல் பிரிவுக்கு 5, உட்சுரப்பியியல் பிரிவுக்கு 2, எம்.சிஎச்., படிப்பில் சிறுநீரகவியல் பிரிவுக்கு 4, புற்றுநோயியல் அறுவை பிரிவுக்கு 4 இடங்கள் கூடுதலாக ஒதுக்கப்பட்டன.
எம்.சிஎச்., படிப்பில் இரைப்பை குடலியல் அறுவை மற்றும் ரத்தநாள சுரப்பிகள் அறுவை பிரிவுக்கு மட்டும் கூடுதல் இடங்கள் ஒதுக்கப்படவில்லை. தற்போது இரைப்பை குடலியல் பிரிவுக்கு 3, ரத்தநாள சுரப்பிகள் பிரிவுக்கு 2 இடங்கள் கூடுதலாக வழங்கப்பட்டுள்ளன.

பேராசிரியர்கள் கூறுகையில், 'ஏற்கனவே எம்.பி.பி.எஸ்., படிப்புக்கு கூடுதலாக 100 இடங்களை பெற்றுள்ளோம். இப்போது மேற்படிப்புகளுக்கும் கூடுதலாக 30 இடங்கள் கிடைத்திருப்பது மகிழ்ச்சி. அதிகரிக்கப்பட்ட இடங்களுக்கு நடப்பாண்டில் மாணவர் சேர்க்கப்படுவர்' என்றனர்.