கோடை விடுமுறை முடிந்து இன்று பள்ளிகள் திறப்பு

சென்னை:தமிழக பள்ளிக்கல்வி பாடத் திட்டத்தில், செயல்படும் பள்ளிகளுக்கு, கோடை விடுமுறை நேற்றுடன் முடிந்தது; இன்று( ஜூன் 3) பள்ளிகள் திறக்கப்படுகின்றன.




தமிழகத்தில், பள்ளிக்கல்வி பாடத் திட்டத்தில் செயல்படும், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், 2018 - 19ம் கல்வி ஆண்டுக்கான பொது தேர்வுகள், மார்ச், 1ல் துவங்கி, ஏப்ரலில் முடிந்தன.மற்ற வகுப்புகளில், தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கு, ஏப்., 13; உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு, ஏப்., 12லும், தேர்வுகள் முடிந்தன.இதையடுத்து, ஒன்றரைமாதம், கோடை விடுமுறை விடப்பட்டது. கோடையில் சிறப்பு வகுப்புகள் நடத்தவும் தடை விதிக்கப்பட்டது.இந்நிலையில், 50 நாட்கள் கோடை விடுமுறைக்கு பின், புதிய கல்வி ஆண்டுக்காக, இன்று, பள்ளிகள் திறக்கப்படுகின்றன.





தமிழக அரசின் இலவச திட்டங்கள் பெற, தகுதியுள்ள மாணவர்களுக்கு, இலவச நோட்டு புத்தகங்கள், பாடத் புத்தகங்கள், இன்றே வழங்கப்படுகின்றன.கடந்த ஆண்டு ஒன்று, ஆறு, ஒன்பது மற்றும் பிளஸ் 1 வகுப்புகளுக்கு, புதிய பாடத் திட்டம் அமலானது.இந்த ஆண்டு, 10ம் வகுப்பு மற்றும், பிளஸ் 2வுக்கு புதிய பாட திட்டம் அமலாகிறது. மாணவர்களுக்கான, சீருடைகளும் விரைவில் வழங்கப்படும் என, அரசு அறிவித்துள்ளது.'பஸ் பாஸ் வேண்டாம்'பள்ளிகள் இன்று திறக்கப்படும் நிலையில், மாணவர்களுக்கு புதிய, இலவச பஸ் பாஸ் தேவை.
ஆனால், இரண்டு மாதங்கள் கழித்தே, பாஸ் கிடைக்கும் என்பதால், மாணவர்கள் பள்ளி சீருடை அணிந்திருந்தால் போதும்; இலவசமாக பள்ளிக்கு பயணிக்கலாம் என, கல்வித்துறைக்கு, போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.'மாணவர்கள் பள்ளி சீருடையில் இருந்தால், அவர்களிடம் டிக்கெட் வாங்க வேண்டாம்' என, பஸ் நடத்துனர்களுக்கும், போக்குவரத்து துறை அறிவுறுத்தி உள்ளதாக, கல்வி அதிகாரிகள்தெரிவித்தனர்.