புதிய பாட திட்ட புத்தகத்தில் மாணவன் படம்

சென்னை: தமிழக அரசின் புதிய பாடத்திட்ட புத்தகத்தில், அரசு பள்ளியில், மூன்றாம் வகுப்பு படிக்கும் மாணவனின் புகைப்படம் இடம் பெற்றுள்ளது.


ஈரோடு மாவட்டம், கனி ராவுத்தர் குளம், சி.எஸ்.நகர் பகுதியில் வசிப்பவர், பாட்ஷா; இவரது மனைவி அப்ரோஸ் பேகம். இவர்களின் மகன், முகம்மது யாசின். எட்டு வயதான இந்த சிறுவன்.சின்ன சேமூர் அரசு தொடக்கப் பள்ளியில், தற்போது மூன்றாம் வகுப்பு படிக்கிறான்.

இந்த மாணவன், 2018ல் இரண்டாம் வகுப்பு படிக்கும் போது, பள்ளி இடைவேளை நேரத்தில், வெளியே சென்றான். அப்போது, பள்ளி அருகே சாலையில், ஒரு பை கிடந்தது. அதில், பணக் கட்டுகள் இருந்தன. உடனே, அந்த பையை எடுத்த யாசின், அதை, தன் வகுப்பு ஆசிரியையிடம் ஒப்படைத்தான்.

அந்த பையுடன் சிறுவனை, போலீஸ் நிலையம் அழைத்து சென்ற ஆசிரியை, அதை போலீசாரிடம் ஒப்படைத்தார்.அவர்களின் நேர்மையை பாராட்டி, சிறுவன், ஆசிரியை மற்றும் பெற்றோரை நேரில் அழைத்து, ஈரோடு மாவட்ட, எஸ்.பி., சக்தி கணேசன் பாராட்டினார்.

இந்த சம்பவம், 'வாட்ஸ் ஆப்' மற்றும் ஊடகங்கள் வழியே பரவியது. அந்த சிறுவனுக்கு, பல தரப்பிலும் பாராட்டுகள் குவிந்தன.இந்நிலையில், அந்த மாணவனின் செயலை, மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாக்க நினைத்த, தமிழக பள்ளி கல்வித் துறை அதிகாரிகள், அவன் படித்த இரண்டாம் வகுப்பு, தமிழ் பாடப் புத்தகத்திலேயே, அவனது புகைப்படத்தை வெளியிட்டு, பெருமைப்படுத்தி உள்ளனர்.

ஆத்தி சூடியின், 'நேர்பட ஒழுகு' என்ற தலைப்பில், படக் கதையுடன் கூடிய பாடத்தில், 53ம் பக்கத்தில், முகம்மது யாசினின் பெயர் மற்றும் படங்கள் இடம் பெற்றுள்ளன.

புதிய பாட திட்ட பயிற்சிவரும், 17ம் தேதி துவக்கம்தமிழகத்தில், நடப்பு கல்வி ஆண்டில், இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து, ஏழு, எட்டு, 10, பிளஸ் 2 ஆகிய வகுப்புகளுக்கு, புதிய பாடத் திட்டம் அமலாகியுள்ளது. இந்த பாடப் புத்தகங்களை புரிந்து, மாணவர்களுக்கு வகுப்பு நடத்த, பள்ளி கல்வி சார்பில், ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.

இதன்படி, பிளஸ் 2 புதிய பாடத்திட்டத்துக்கான முதுநிலை ஆசிரியர்களுக்கு, வரும், 17ம் தேதி முதல், பயிற்சி நடத்தப்படுகிறது. ஜூலை, 4 வரை ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்கப்படும் என, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் அறிவித்துள்ளது.