பள்ளி மாணவர்கள் பழைய பஸ் பாஸில் பயணிக்கலாம்: போக்குவரத்துத்துறை அறிவிப்பு

கோடை விடுமுறைக்குப் பிறகு தமிழகம் முழுவதும் அரசு, தனியார் பள்ளிகள் திங்கள்கிழமை திறக்கப்படவுள்ளன.

தமிழகத்தில் ஒன்று முதல் ஐந்து வரையிலான வகுப்புகளுக்கு மே மாதம் மட்டுமே விடுமுறை விடப்படும். ஆனால், இந்த ஆண்டு, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளைப் போன்றே ஏப்ரல் இரண்டாவது வாரம் முதல் விடுமுறை அளிக்கப்பட்டது. கோடை விடுமுறை ஞாயிற்றுக்கிழமையுடன் முடிவுக்கு வருகிறது.
இதையடுத்து அனைத்துப் பள்ளிகளும் திங்கள்கிழமை (ஜூன் 3) திறக்கப்பட உள்ளன. பள்ளிகள் திறந்த முதல் நாளிலேயே அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இலவசப் பாடநூல்கள், சீருடைகள் வழங்கப்படவுள்ளன.
இந்த ஆண்டு முதல், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு சீருடைகளின் நிறம் மாற்றப்பட்டுள்ளது. பள்ளி திறக்கும் நாளிலேயே பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் நடத்தப்படும் தேதிகளும், தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதிகளும் அறிவிக்கப்படவுள்ளதாகத் தெரிகிறது.
இந்நிலையில், தமிழகத்தில் திங்கள்கிழமை முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் மாணவ, மாணவிகள் பழைய பஸ் பாஸில் பயணிக்கலாம் என்று போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது. மேலும், சீருடை அணிந்து பயணிக்கும் மாணவ, மாணவிகள் டிக்கெட் எடுக்க வேண்டிய அவசியமில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.