இன்ஜினியரிங் கவுன்சிலிங்கிற்கு சான்றிதழ் ஆய்வு இன்று துவக்கம்

சென்னை:இன்ஜினியரிங் கவுன்சிலிங்கில் பங்கேற்க விண்ணப்பித்த, 1.33 லட்சம் மாணவர்களுக்கு, சான்றிதழ் ஆய்வு இன்று துவங்குகிறது. இதற்காக, தமிழகம் முழுவதும், 45 மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.

பிளஸ் 2 முடித்த மாணவர்கள், மருத்துவ படிப்புகளில் சேர, 'நீட்' நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இன்ஜினியரிங் மற்றும் கலை, அறிவியல் கல்லுாரிகளில் சேர, பிளஸ் 2 மதிப்பெண் மட்டும் போதும். இதில், அண்ணா பல்கலை இணைப்பில் உள்ள இன்ஜினியரிங் கல்லுாரிகளில், அரசு ஒதுக்கீட்டில் சேர, கவுன்சிலிங்கில் பங்கேற்க வேண்டும்.
இந்த ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை கவுன்சிலிங், தமிழ்நாடு தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் சார்பில், ஜூலையில் நடத்தப்படுகிறது. கவுன்சிலிங்கில் பங்கேற்க, மே, 2 முதல், 31 வரை, ஆன்லைனில் விண்ணப்ப பதிவு நடந்தது. மாநிலம் முழுவதும், பிளஸ் 2 முடித்த, 1.33 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.அவர்களுக்கான அசல் சான்றிதழ் ஆய்வு, இன்று துவங்க உள்ளது.

வரும், 12ம் தேதி வரை, சான்றிதழ் ஆய்வு நடக்கிறது. இதற்காக, தமிழகம் முழுவதும், 45 உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மையங்களுக்கு, மாணவர்கள் நேரடியாக வந்து, சான்றிதழ்களை சரிபார்த்து செல்ல வேண்டும்.சென்னையில், தரமணியில் உள்ள மத்திய பாலிடெக்னிக், கோட்டூர்புரம் பிர்லா கோளரங்கம், அண்ணா நுாற்றாண்டு நுாலகம் ஆகிய இடங்களில், சான்றிதழ் சரிபார்ப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

விண்ணப்பித்த மாணவர்கள், எந்த நேரத்தில், எந்த சேவை மையத்திற்கு, சான்றிதழ் சரி பார்ப்புக்கு வர வேண்டும் என, தொழில்நுட்ப கல்வி இயக்குனரகத்தில் இருந்து, எஸ்.எம்.எஸ்., அனுப்பப்பட்டு உள்ளதாக, இன்ஜி., கவுன்சிலிங் கமிட்டி செயலர், புருஷோத்தமன் தெரிவித்தார்.