இன்ஜி., படிப்பு: 7ம் தேதி சான்றிதழ் ஆய்வு துவக்கம்; 1.33 லட்சம் பேர் மட்டுமே விண்ணப்பம்

சென்னை : இன்ஜினியரிங் படிப்பில், 1.72 லட்சம் இடங்கள் உள்ள நிலையில், 1.33 லட்சம் பேர் மட்டுமே விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்கு, வரும், 7ம் தேதி முதல், சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கும் என, உயர் கல்வித்துறை அமைச்சர், அன்பழகன் அறிவித்துள்ளார்.


பிளஸ் 2 முடித்த மாணவர்கள், அண்ணா பல்கலை இணைப்பில் உள்ள, இன்ஜினியரிங் கல்லுாரிகளில், பி.இ., - பி.டெக்., படிப்புகளில் சேர, தமிழக தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் வாயிலாக, கவுன்சிலிங் நடத்தப்படுகிறது. இதற்கான விண்ணப்ப பதிவு, மே, 2ல் துவங்கி, 31ல் முடிந்தது.விண்ணப்பித்த மாணவர்களுக்கு, தரவரிசை பட்டியலுக்கான, 'ரேண்டம் எண்' என்ற, சமவாய்ப்பு எண் நேற்று ஒதுக்கப்பட்டது. உயர் கல்வித்துறை அமைச்சர் அன்பழகன், உயர்கல்வி முதன்மை செயலர், மங்கத்ராம் சர்மா ஆகியோர், ரேண்டம் எண்ணை வெளியிட்டனர்.

இதையடுத்து, அமைச்சர் அன்பழகன் அளித்த பேட்டி:ஒரே, 'கட் ஆப்' மற்றும் ஒரே பிறந்த தேதியுள்ள மாணவர்களின் தரவரிசையை நிர்ணயம் செய்ய, ரேண்டம் எண் பயன்படுத்தப்படுகிறது. கடந்த, 2018 கவுன்சிலிங்கின் போது, 21 மாணவர்களுக்கு மட்டுமே, இந்த ரேண்டம் எண் பயன்பட்டது.விண்ணப்பித்த அனைத்து மாணவர்களின், மொபைல் போன் எண்களுக்கும், எஸ்.எம்.எஸ்., மற்றும், 'இ - மெயில்' வழியாக, ரேண்டம் எண் அனுப்பப்படும். இன்ஜினியரிங் மாணவர் சேர்க்கை இணையதளத்தில், மாணவர்கள் தங்களின் பயனீட்டாளர் குறியீட்டு எண்ணை பயன்படுத்தியும், ரேண்டம் எண்ணை தெரிந்து கொள்ளலாம்.

இன்ஜினியரிங் கவுன்சிலிங்கில் பங்கேற்க,1.33 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். மொத்தம், 494 கல்லுாரிகளில், 1.72 லட்சம் இடங்களுக்கு கவுன்சிலிங் நடத்தப்பட உள்ளது. ரேண்டம் எண் வெளியீட்டை தொடர்ந்து, 7ம் தேதி முதல், 12ம் தேதி வரை, சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்படும்.மாணவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட உதவி மையங்களுக்கு, குறிப்பிட்ட தேதி மற்றும் நேரத்தில் சென்று, தங்களின் அசல் சான்றிதழ்களை சரிபார்த்து கொள்ளலாம். கூடுதல் விபரங்களை, 044 - 2235 1014, 2235 1015 என்ற தொலைபேசி எண்களில் கேட்டு, தெரிந்து கொள்ளலாம். கவுன்சிலிங், ஜூலை, 3ல் துவங்கும்.இவ்வாறு, அமைச்சர் கூறினார்.