40 நாட்களில் ஆசிரியர் தேர்வு; பள்ளிக்கல்வி அமைச்சர் உறுதி

கோபி: ''ஆசிரியர் தேர்வு, இனி, 40 நாட்களுக்குள் முடிக்கப்படும்,'' என, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.


ஈரோடு மாவட்டம், கோபி தொகுதி வளர்ச்சி பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் நேற்று நடந்தது. கலெக்டர் கதிரவன் தலைமை வகித்தார். பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் பேசியதாவது:

ஒவ்வொருவரும் நினைத்தால், அரசு பள்ளிகளை சீர் செய்ய முடியும். நடப்பாண்டு பள்ளிக்கல்வித் துறைக்கு, 28 ஆயிரத்து, 757 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனாலும், அனைத்து பணிகளையும், முழுமையாக அரசே செய்ய முடியாது.

ஆனால், ஒருவர், 5,000 ரூபாய் செலவு செய்தால், பள்ளியின் தளத்தை சரி செய்யலாம். ௧௦ ஆயிரம் ரூபாய் செலவு செய்தால், வகுப்பறையில் வண்ணம் பூச முடியும். இதைப் பற்றி நான், ரயிலில் சென்றாலும், விமானத்தில் சென்றாலும், பார்ப்பவர்களிடம் எல்லாம் வலியுறுத்தி வருகிறேன்.

காற்று, நீரை யார் விற்றாலும், அவர் வாழ்ந்ததாக சரித்திரமே இல்லை. மிக விரைவில், முதல்வரின் ஒப்புதலுக்கு பின், பள்ளிக்கல்வித் துறை மூலம் மரம் நடும் விழா நடக்கிறது.

இனி எவ்வளவு ஆசிரியர்கள் தேவையோ, அதற்கு தகுந்தாற்போல், ஆன்லைனில் பதிவு செய்து, தேர்வு செய்வோம். ஒரு ஆசிரியரை தேர்வு செய்ய, முன்பு ஏழு முதல் எட்டு மாதங்களானது. இனி, ஆசிரியர் தேர்வை, 40 நாட்களுக்குள் முடிக்க, முயற்சி மேற்கொண்டுள்ளோம். இவ்வாறு அவர் பேசினார்.