எம்.பி.பி.எஸ்., சீட் 350 அதிகரிப்பு

மதுரை:தமிழக அரசு மருத்துவக் கல்லுாரிகளில், எம்.பி.பி.எஸ்., சீட்களின் எண்ணிக்கை, 3,350 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. எனவே, நடப்பாண்டில், கூடுதலாக, 298 தமிழ் மாணவர்களுக்கு வாய்ப்பு கிடைக்க உள்ளது.

மாநிலத்தில் கடந்த ஆண்டு, 22 அரசு மருத்துவக் கல்லுாரிகளில், மொத்தமுள்ள, 3,000 எம்.பி.பி.எஸ்., சீட்களுக்கு மாணவர் சேர்க்கை நடந்தது. கரூரில், புதிதாக அரசு மருத்துவக் கல்லுாரி துவக்கப்பட்டது.அக்கல்லுாரிக்கு, எம்.பி.பி.எஸ்., சீட்களை ஒதுக்கக் கோரி, இந்திய மருத்துவக் கவுன்சிலுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதேபோல, ஏற்கனவே, 150 சீட்களுடன் இயங்கிய மதுரை, திருநெல்வேலி மருத்துவக் கல்லுாரி நிர்வாகங்களும், கூடுதலாக, தலா, 100 சீட்களை கோரின.இதை ஏற்ற மருத்துவக் கவுன்சில், கரூர் கல்லுாரிக்கு, 150 சீட்கள்; மதுரை, திருநெல்வேலி கல்லுாரிகளுக்கு, கூடுதலாக, 100 சீட்களை ஒதுக்கியது.இதனால், தமிழக அரசு மருத்துவக் கல்லுாரிகளில் இருந்த, 3,000 எம்.பி.பி.எஸ்., சீட்கள், தற்போது, 3,350 ஆக அதிகரித்துள்ளன.

கூடுதலாக கிடைத்த, 350 சீட்களுக்கும், நடப்பாண்டே, மாணவர் சேர்க்கை நடக்க உள்ளது. மருத்துவக் கல்வி இயக்குனர் எட்வின்ஜோ கூறுகையில், ''எம்.பி.பி.எஸ்., சீட்களின் எண்ணிக்கை, 3,350 ஆக அதிகரித்து இருப்பது, மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி. ''இதில், 85 சதவீத சீட்கள் தமிழக மாணவர்களுக்கானது. இதன்படி, 350 இடங்களில், 298 தமிழ் மாணவர்கள் சேர முடியும்,'' என்றார்.