20ம் தேதி வெளியாகிறது இன்ஜி., தரவரிசை பட்டியல்

சென்னை:இன்ஜினியரிங் கவுன்சிலிங்கிற்கு விண்ணப்பித்த, 1.04 லட்சம் பேருக்கு, 'கட் - ஆப்' மதிப்பெண்ணுடன் கூடிய தரவரிசை பட்டியல், வரும், 20ம் தேதி வெளியாகிறது.

பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு, அண்ணா பல்கலையின் இணைப்பில் உள்ள இன்ஜினியரிங் கல்லுாரிகளில், பி.இ., - பி.டெக்., மாணவர் சேர்க்கை, கவுன்சிலிங் வழியே வழங்கப்படுகிறது. இந்த கவுன்சிலிங்கை, தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம், ஆன்லைன் மற்றும் நேரடி ஒற்றை சாளர முறையில் நடத்துகிறது.இந்தாண்டு கவுன்சிலிங்குக்கு, மே, 2 முதல், 31 வரை, ஆன்லைனில் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. விண்ணப்பங்கள் பரிசீலனைக்கு பின், ஜூன், 7 முதல், 13 வரை, மாணவர்களின் அசல் சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டன. இன்ஜி., படிக்க, மொத்தம், ஒரு லட்சத்து, 33 ஆயிரத்து, 166 மாணவர்கள் விண்ணப்பித்தனர். ஆனால், சான்றிதழ் சரிபார்ப்பில், ஒரு லட்சத்து, 4,418 பேர் மட்டுமே பங்கேற்றனர்; 28 ஆயிரத்து, 748 பேர் சான்றிதழ் சரிபார்ப்புக்கு வரவில்லை.இதைத் தொடர்ந்து, வரும், 20ம் தேதி, மாணவர்களின், கட் - ஆப் மதிப்பெண்ணுடன் கூடிய, தரவரிசை பட்டியல் வெளியிடப்படுகிறது. 1.04 லட்சம் மாணவர்களின் மதிப்பெண் மற்றும் ஜாதி வாரி ஒதுக்கீடு அடிப்படையில், மாணவர் சேர்க்கை நடத்தப்படும்.இதையடுத்து, சிறப்பு பிரிவில் ஒதுக்கீடு பெறும், மாற்று திறனாளி, முன்னாள் படை வீரர் குடும்பத்தினர் மற்றும் விளையாட்டு மாணவர்களுக்கு, ஒற்றை சாளர முறையில், கவுன்சிலிங் நடத்தப்படும். இந்த கவுன்சிலிங்கில், ஒரு லட்சத்து, 72 ஆயிரத்து, 148 இடங்களுக்கு மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. கவுன்சிலிங்கிற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என, உயர்கல்வித்துறை அமைச்சர், அன்பழகன் தெரிவித்துள்ளார்.68 ஆயிரம் இடங்கள் காலிஇன்ஜினியரிங் கவுன்சிலிங்கில், ஒவ்வொரு ஆண்டும், 90 ஆயிரம் முதல், 95 ஆயிரம் வரையிலான இடங்கள், மாணவர்கள் இன்றி, காலியாக அறிவிக்கப்படும். இந்த ஆண்டு, 434 கல்லுாரிகளில், 1.72 லட்சம் இடங்கள், மாணவர் சேர்க்கைக்காக, கவுன்சிலிங்கில் பட்டியலிடப்படுகின்றன. தற்போதைய நிலவரப்படி, 1.04 லட்சம் பேர் மட்டுமே, கவுன்சிலிங்குக்கு தகுதி பெற்றுள்ளனர்.இதன் அடிப்படையில் மட்டும், 68 ஆயிரம் இடங்கள் மாணவர்கள் இன்றி, காலியாகும் நிலையில் உள்ளன. கவுன்சிலிங் துவங்கிய பின், பங்கேற்காத மாணவர்களின் இடங்களும் சேர்ந்தால், காலியிட எண்ணிக்கை உயர வாய்ப்புள்ளது.