பிளஸ் 2 அசல் மதிப்பெண் சான்றிதழ் ஜூன் 3 முதல் வழங்கப்படும்

பிளஸ் 2 பொதுத் தேர்வு அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் மாணவர்களுக்கு ஜூன் 3-ஆம் தேதி முதல் பள்ளிகள், தனித் தேர்வு மையங்களில் வழங்கப்படவுள்ளன.

இது தொடர்பாக தேர்வுத்துறை இயக்குநர் தண்.வசுந்தராதேவி வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: கடந்த மார்ச் மாதம் பிளஸ் 2 பொதுத் தேர்வெழுதிய பள்ளி மாணவர்கள் பிளஸ் 1, பிளஸ் 2 அசல் மதிப்பெண் சான்றிதழ்களை (மறுகூட்டல், மறுமதிப்பீடு உள்பட) அந்தந்த பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மூலமாகவும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய தேர்வு மையங்கள் மூலமாகவும் ஜூன் 3-ஆம் தேதி (திங்கள்கிழமை) முதல் பெற்றுக் கொள்ளலாம்.
பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத் தேர்வுகளில் அனைத்துப் பாடங்களிலும் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மட்டும், பிளஸ் 1 (600 மதிப்பெண்கள்) மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வுகளுக்கான (600 மதிப்பெண்கள்) மதிப்பெண் சான்றிதழ்கள் தனித்தனியே வழங்கப்படும். பிளஸ் 1 பொதுத் தேர்விலோ அல்லது பிளஸ் 2 பொதுத்தேர்விலோ அல்லது இரண்டு பொதுத் தேர்வுகளிலுமோ முழுமையாக தேர்ச்சியடையாத மாணவர்களுக்கு, அவர்கள் இரு தேர்வுகளிலும் பெற்ற மதிப்பெண்களை பதிவு செய்து அச்சிடப்பட்ட ஒரே மதிப்பெண் பட்டியலாக வழங்கப்படும். இந்த மாணவர்கள் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வுகளில் அனைத்துப் பாடங்களிலும் தேர்ச்சி பெற்ற பின்னரே, அவர்களுக்கு மேற்கண்ட இரு தேர்வுகளுக்கான தனித்தனி மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்படும் என அதில் கூறியுள்ளார்.