ஆசிரியர் தகுதி தேர்வு நாளை துவக்கம்: 1,552 மையங்களில் 6 லட்சம் பேர் எழுதுகின்றனர்

சென்னை:ஆசிரியர் பணி தகுதிக்கான, 'டெட்' தேர்வு, நாளை முதல் இரண்டு நாட்கள் நடக்கிறது. 1,552 தேர்வு மையங்களில், ஆறு லட்சம் பேர் எழுதுகின்றனர்.


மத்திய அரசின் கட்டாய கல்வி உரிமை சட்டப்படி, அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், ஆசிரியர் பணியில் சேருவதற்கு, 'டெட்' என்ற, ஆசிரியர் தகுதி தேர்வில், கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும். ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பணியாற்ற, தகுதி தேர்வில் முதல் தாளிலும், எட்டாம் வகுப்பு வரை பணியாற்ற, தகுதி தேர்வின் இரண்டாம் தாளிலும், தேர்ச்சி பெற வேண்டும்.
இந்த ஆண்டுக்கான, டெட் தேர்வு, நாளையும், நாளை மறுநாளும் நடக்கிறது. இந்த தேர்வில் பங்கேற்க, ஆறு லட்சம் பேர் விண்ணப்பித்து உள்ளனர். கடந்த, 2010க்கு பின், அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியில் சேர்ந்த ஆசிரியர்களில், இதுவரை, தகுதி தேர்வு முடிக்காதவர்கள், இந்த தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும் என, கெடு விதிக்கப்பட்டுள்ளது.
தேர்வுக்கான, 'ஹால் டிக்கெட்'டுகள், ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளன. அதில், புகைப்படம் இருக்க வேண்டிய இடத்தில், கையெழுத்தோ, வேறு பதிவுகளோ இருந்தால், புகைப்படத்தில், அரசிதழ் பதிவு பெற்ற, 'கெசட்டட்' அதிகாரியிடம் சான்றொப்பம் பெற வேண்டும் என, ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.இந்த தேர்வுக்காக, முதல் தாளுக்கு, 471, இரண்டாம் தாளுக்கு, 1,081 என, 32 மாவட்டங்களில், 1,552 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

சென்னையில் மட்டும், 88 மையங்களில், தேர்வு நடக்கிறது.தேர்வில் காப்பியடிப்பதை தடுக்க, பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. மொபைல் போன் உட்பட, மின்னணு பொருட்களை தேர்வறைக்குள் எடுத்து செல்ல, தடை விதிக்கப்பட்டுள்ளது. தேர்வு மேற்பார்வை பணியில், ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் என, ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் ஈடுபடுகின்றனர்.


'ஹால் டிக்கெட்'டில் படம் இல்லை: அச்சம் வேண்டாம்'
ஹால் டிக்கெட்'டில், புகைப்படம் இல்லாததால், ஆசிரியர் தகுதி தேர்வர்கள், அச்சம் அடைந்துள்ளனர். இவர்களின் அச்சத்தை போக்க, அரசின் அசல் அடையாள சான்றுகளை எடுத்து வந்து, தேர்வு எழுதலாம் என, கல்வித்துறை தெரிவித்துள்ளது.
இவர்களின் அச்சத்தை போக்க, ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர், வெங்கடேஷ் கூறியதாவது: ஆசிரியர் தகுதி தேர்வர்கள் செய்த பிழையால், சில, ஹால் டிக்கெட்களில், புகைப்படம் இடம்பெற வேண்டிய இடத்தில், தேர்வு எழுதுவோரின்கையெழுத்து இடம் பெற்றுள்ளது. ஹால் டிக்கெட்டில் பிழை உள்ள தேர்வர்கள், தங்களிடம்உள்ள ஒரு புகைப்படத்தை, ஹால் டிக்கெட்டில் ஒட்டி, அரசு பதிவுபெற்ற அலுவலரிடம், கையெழுத்து பெற்று வந்து, தேர்வு எழுதலாம்.

தேர்வு மையத்தில், தேர்வு மைய முதன்மை கண்காணிப்பாளரிடம், வருகை பதிவேட்டில் ஒட்டுவதற்கு, இன்னொரு புகைப்படத்தை கொடுக்க வேண்டும். மேலும், அரசின் அடையாள அட்டைகளான, ஆதார், பான், பாஸ்போர்ட் ஆகியவற்றை எடுத்து வர வேண்டும்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.