இன்ஜினியரிங் படிப்புக்கு 1.32 லட்சம் விண்ணப்பம்

சென்னை, இன்ஜினியரிங் படிப்பில் சேர்வதற்கான 'ஆன்லைன்' விண்ணப்ப பதிவு நேற்று முடிந்தது; 1.32 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.தமிழகத்தில் உள்ள நிகர்நிலை
பல்கலைகளில் இன்ஜினியரிங் படிப்பில் சேர நேரடி சேர்க்கை நடத்தப்படுகிறது. அதேபோல் தனியார் இன்ஜினியரிங் கல்லுாரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கும் நேரடி மாணவர் சேர்க்கை நடக்கிறது.ஆனால் அண்ணா பல்கலை இணைப்பில் உள்ள தனியார் கல்லுாரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு மட்டும் தமிழக அரசின் சார்பில் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. இதற்கான கவுன்சிலிங்கை தமிழக தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் நடத்துகிறது.கவுன்சிலிங்கிற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு மே 2ல் துவங்கியது; நேற்று முடிந்தது. நேற்று மாலை 5:00 மணி வரை 1.32 லட்சம் பேர் பதிவு செய்துள்ளனர். இது 2018ம் ஆண்டை விட 27 ஆயிரம் குறைவு.கடந்த ஆண்டில் 1.59 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்தனர். இதில் 98 ஆயிரம் பேர் கவுன்சிலிங் வழியாக கல்லுாரிகளில் சேர்ந்தனர். ஆனால் 88 ஆயிரம் இடங்கள் மாணவர்கள் இன்றி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இந்த ஆண்டு 1.75 லட்சம் இடங்களுக்கு மாணவர் சேர்க்கை நடத்தப்பட உள்ளது.