தபால் ஓட்டுகள் பதுக்கல்?ஆசிரியர் சங்கத்தினர் புகார்

சென்னை, :தமிழகத்தில் நடந்துள்ள, லோக்சபா மற்றும் சட்டசபை இடைத்தேர்தலில், தபால் ஓட்டுகளை பெற்ற பலர், அதை பதிவு செய்யாமல், பதுக்கி வைத்துள்ளதாக புகார் எழுந்துள்ளது.


பலருக்கு தபால் ஓட்டு களே தரவில்லை என, ஆசிரியர் சங்கத்தினர் புகார் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில், 38 லோக்சபா தொகுதிகளுக்கான தேர்தலும், 18 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும், ஏற்கனவே நடந்து முடிந்து உள்ளது.இன்னும் நான்கு சட்ட சபை தொகுதிகளுக்கு, வரும், 19ம் தேதி தேர்தல் நடக்க உள்ளது. தேர்தல் பணியில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு, தபால் ஓட்டு பதிவுக்கான வாய்ப்புகள் தரப்பட்டன.

தேர்தல் பணிகளுக்கான பயிற்சி வகுப்புகளின் போது, இதற்கான விண்ணப்பங்கள் வழங்கப் பட்டு, அவற்றை அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பூர்த்தி செய்து கொடுத்தனர். பின், அவர்களுக்கு, தபால் ஓட்டுகளை பதிவு செய்யும் விண்ணப்பம் தனியாக வழங்கப்பட்டது.ஏராளமான ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள், தபால் ஓட்டுகளுக்கான விண்ணப்பத்தை மட்டும் பெற்று, அவற்றை பதிவு செய்யாமல், பதுக்கி வைத்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்து ள்ளது.

தபால் ஓட்டுகளை பதிவு செய்ய, மே, 22 வரை அவகாசம் உள்ளதால், கடைசி நேரத்தில், அதற்கான பெட்டியில் போடலாம் என, வைத்திருப்பதாக கூறப்படுகிறது.இந்நிலையில், தேர்தல் பணியில் ஈடுபட்ட ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பலருக்கு, தபால் ஓட்டுகளுக்கான விண்ணப்பங்கள் கொடுக்கப்படவில்லை. பலரிடம், சுய விபரங்கள் மட்டும் பெற்று, ஓட்டு போடும் விண்ணப்பங்களை, ஒரு தரப்பினர், தாங்களே நிரப்பி போட்டு விட்டதாக, ஆசிரியர் - அரசு ஊழியர் கூட்டமைப்பான, 'ஜாக்டோ - ஜியோ' நிர்வாகிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.