மொழி பாடத்தில் மாற்றம் இல்லை: செங்கோட்டையன்

சென்னை : ''மேல்நிலை வகுப்புகளில், ஒற்றை மொழிப்பாடம் அமல்படுத்தப்பட
உள்ளதாக வெளியான தகவல் தவறானது; பழைய முறையே தொடரும்,'' என, பள்ளி கல்வித்துறை அமைச்சர், செங்கோட்டையன் கூறினார். நிருபர்களிடம், நேற்று அவர் கூறியதாவது : மேல்நிலை வகுப்புகளில், தமிழ் அல்லது ஆங்கிலத்தில், ஏதேனும் ஒன்றை மொழிப்பாடமாக தேர்வு செய்து படிக்கலாம் என, வெளியான தகவல் தவறானது. அத்தகைய எண்ணம், அரசுக்கு இல்லை. தற்போது இருப்பது போல, தொடர்ந்து ஆறு பாடங்கள் இருக்கும்.

தமிழ் மற்றும் ஆங்கிலம் கட்டாயம் இருக்கும்.அரசு பள்ளிகளில், எல்.கே.ஜி., - யு.கே.ஜி. ,வகுப்புகள், ஜூன், 1ல், துவக்கப்படும். ஆறு முதல், எட்டாம் வகுப்பு வரை, 7,000 வகுப்பறைகள், கம்ப்யூட்டர்மயமாக்கப்படும்.ஒன்பதாம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை, அனைத்து வகுப்புகளும், கம்ப்யூட்டர் மயமாக்கப்படும்; இன்டர்நெட் வசதி ஏற்படுத்தி தரப்படும். பள்ளிக்கு தனி, 'டிவி' சேனல், தேர்தல் முடிந்ததும் உருவாக்கப் படும்.'ரோபோ' உதவியுடன், கல்வி கற்றுத் தர ஏற்பாடு செய்யப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.