இன்ஜி., கவுன்சிலிங் ஒரு லட்சம் பேர் பதிவு

சென்னைஇன்ஜினியரிங் படிப்பில் சேருவதற்கு இரண்டு வாரங்களில் ஒரு லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாக தமிழக இன்ஜினியரிங் கவுன்சிலிங் கமிட்டி
அறிவித்துள்ளது.தமிழகத்தில் உள்ள இன்ஜினியரிங் கல்லுாரிகள் அண்ணா பல்கலை இணைப்பில் உயர் கல்வித்துறையின் நேரடி கட்டுப்பாட்டில் செயல்படுகின்றன. பிளஸ் 2 முடித்தவர்கள் இந்த கல்லுாரிகளில் பி.இ. மற்றும் பி.டெக். படிப்புகளில் முதலாம் ஆண்டு சேர தமிழக அரசின் வாயிலாக ஒருங்கிணைந்த கவுன்சிலிங் நடத்தப்படுகிறது.தமிழக உயர் கல்வித்துறை சார்பில் தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் வழியே இந்த ஆண்டு கவுன்சிலிங் நடத்தப்படுகிறது. இதற்கான விண்ணப்ப பதிவு மே 2ல் துவங்கியது. முதல் நாளில் 15 ஆயிரம் பேர் விண்ணப்பித்தனர். தொடர்ந்து விண்ணப்பத்தின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.நேற்று மாலை 5:00 மணி நிலவரப்படி இன்ஜினியரிங் படிப்பில் சேர ஒரு லட்சத்து 818 பேர் விண்ணப்பித்துள்ளனர். மே 31 வரை விண்ணப்பிக்க அவகாசம் தரப்பட்டுள்ளது. எனவே இந்த எண்ணிக்கை 1.75 லட்சமாக உயரலாம் என உயர் கல்வித்துறை கணித்துள்ளது.