கடும் கட்டுப்பாடுகளுடன் இன்று, 'நீட்' நுழைவு தேர்வு

சென்னை: மருத்துவ படிப்பில் சேர்வதற்கான, 'நீட்' நுழைவு தேர்வு, இன்று நடக்கிறது.
முறைகேட்டை தடுக்க, கண்காணிப்பு கேமரா மற்றும் மொபைல் போன் தடுப்பு, 'ஜாமர்' கருவிகள் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளன.இந்த தேர்வை, தமிழகத்தில், 1.40 லட்சம் பேர் உட்பட, நாடு முழுவதும், 15 லட்சம் பேர், 2,500 தேர்வு மையங்களில் எழுதுகின்றனர்.
சென்னையில், 31 மையங்கள் உட்பட, 200 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.பகல், 2:00 முதல், 5:00 மணி வரை தேர்வு நடக்கிறது. தேர்வு மையங்களின் முகவரிகள், 'ஹால் டிக்கெட்'டில் உள்ளன. ஹால் டிக்கெட் இல்லாமல் அனுமதிக்கப்பட மாட்டர். பகல், 12:00 மணிக்கே வந்து விட வேண்டும். தேர்வு மைய கதவுகள், பகல், 1:30 மணிக்கு அடைக்கப்படும். அதற்கு மேல் வருவோர், அனுமதிக்கப்பட மாட்டர். சுவர் ஏறி குதித்தல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டால், சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





ஹால் டிக்கெட்டை, வண்ணத்தில், 'ஜெராக்ஸ்' எடுத்துக் கொள்ள வேண்டும். தேர்வு மையத்தில் உள்ள, வருகை பதிவேட்டில் ஒட்டுவதற்காக, ஒரு புகைப்படம் எடுத்துச் செல்வது அவசியம். பள்ளிகள், கல்லுாரிகள், பயிற்சி மையங்கள் வழங்கிய அடையாள அட்டைகள், 'ஆதார்' எண் இல்லாத பதிவு ரசீது போன்றவை ஏற்கப்படாது.மாற்று திறனாளிகள், அரசின் அடையாள அட்டை எடுத்து வருவது அவசியம். அவர்கள் முன்கூட்டியே, தேர்வு மையத்துக்கு வருவது நல்லது. ஆடை, ஆபரண கட்டுப்பாடு தொடர்பாக, பாதுகாப்பு ஊழியர்கள் சோதனை நடத்துவர். அதற்கு மாணவ - மாணவியர் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்
கைப்பை, தண்ணீர், உணவு பொருட்கள், கைக்கடிகாரம், மொபைல் போன், பேனா, அழி ரப்பர், 'பர்ஸ், ஸ்கேல்' உட்பட, எந்த பொருளும் எடுத்துச் செல்ல அனுமதியில்லை. தேர்வு எழுத, அங்கேயே கறுப்பு நிற, 'பால் பாய்ன்ட்' பேனா வழங்கப்படும்நீரிழிவு நோய் பிரச்னை உள்ளவர்கள், தண்ணீர், ஆரஞ்ச், வாழைப்பழம் போன்றவை எடுத்துச் செல்லலாம். அதற்கு முன் அனுமதி பெற வேண்டும். ஜிமிக்கி, காது வளையம், மூக்குத்தி, சங்கிலி, 'கிளிப்' போன்றவற்றை அணிய தடை விதிக்கப்பட்டுள்ளது. அரைக்கை சட்டை, மெல்லிய வெளிர் நிற ஆடைகளை தேர்வு செய்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.ஷூ, சாக்ஸ் மற்றும் உயரமான காலணி அணிய அனுமதி இல்லை. அவற்றை அணிந்திருந்தால், வெறுங்காலுடன் மட்டுமே அனுமதிக்கப்படுவர். கூடுதல் விபரங்களை, ntaneet.nic.in என்ற, இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.


கிரிமினல் நடவடிக்கை!
மாணவர்கள், தேர்வு முடியும் நேரம் வரை, தேர்வறையில் காத்திருக்க வேண்டும். தேர்வு வினா - விடை புத்தகத்தின், எந்த பக்கத்தையும் கிழித்து விட கூடாது. அவ்வாறு செய்தால், அவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும்.தேர்வறையில், மாணவர் விபர கோப்பு, வருகைப்பதிவு மற்றும் கணினி வழி வினா - விடை தாள் ஆகியவற்றுக்கு, மாணவர்களிடம் உரிய விபரங்கள் பெறப்படும். மாணவர்களின் கையெழுத்து, இடது கை பெருவிரல் ரேகை பதிவு பெறப்படும் என, தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.கடைகள் இருக்காது!தமிழகத்தில், இன்று வணிகர் தினம் கொண்டாடப்படுகிறது. அதனால், பெரும்பாலான இடங்களில், கடைகளுக்கு விடுமுறை அறிவித்துள்ளனர். எனவே, தேர்வு மையங்களுக்கு அருகில், கடைகள் திறந்திருக்க வாய்ப்பு குறைவு.எனவே, மாணவர்கள், தேர்வறைக்கு செல்லும் முன், உணவு அருந்தவோ, பழச்சாறு, தண்ணீர் குடிப்பதற்கோ வழியில்லாமல் போகலாம். எனவே, முன்னெச்சரிக்கையாக, பெற்றோர், தங்கள் இருப்பிட பகுதிகளில், பொருட்கள் வாங்கி வைத்திருப்பது நல்லது.