அரசின் ஒப்புதல் கிடைத்த உடன் பி.இ. கல்விக் கட்டணம் உயர்த்தப்படும்: அண்ணா பல்கலை. தகவல்

தமிழக அரசின் ஒப்புதல் கிடைத்த உடன் பி.இ. கல்விக் கட்டணம் உயர்த்தப்படும் என அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் குமார் கூறினார். விலைவாசி உயர்வு,
பேராசிரியர்களின் ஊதிய உயர்வு, உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு காரணிகளின் அடிப்படையில் பி.இ. கல்விக் கட்டணத்தை மூன்று மடங்காக உயர்த்த அண்ணா பல்கலைக்கழகம் பரிந்துரை செய்துள்ளது.
இதுகுறித்து அண்ணா பல்கலைக்கழகப் பதிவாளர் குமார் வியாழக்கிழமை அளித்த பேட்டி:
பொறியியல் கல்லூரி நிர்வாகிகளின் கோரிக்கை, பல்கலைக்கழக வளர்ச்சி ஆகியவற்றை கருத்தில் கொண்டு பல்கலைக்கழகத் துறைகள் மற்றும் பல்கலைக்கழகத்துடன் இணைப்புப் பெற்றுள்ள 500-க்கும் அதிகமான பொறியியல் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கான பருவத்துக்கான (6 மாதங்கள்) கல்விக் கட்டணத்தை ரூ. 8,000 என்பதை ரூ. 20,000-ஆக உயர்த்த பல்கலைக்கழகம் முடிவு செய்து, அதற்கான பரிந்துரையை அரசுக்கு அனுப்பியுள்ளது. அரசின் ஒப்புதல் கிடைத்த உடன், 2019-20-ஆம் கல்வியாண்டு முதல் கட்டண உயர்வு அமல்படுத்தப்படும் என்றார் அவர்.