தகுதி தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம் கோரும் ஆசிரியர்கள்

'ஆசிரியர் தகுதிக்கான, 'டெட்' தேர்வுக்கு விண்ணப்பிக்க, கூடுதல் அவகாசம் வழங்க வேண்டும்' என, பள்ளி கல்வித்துறைக்கு, ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மத்திய அரசின் கட்டாய கல்வி உரிமை சட்டப்படி, 2010 ஆகஸ்ட், 23க்கு பின், ஆசிரியர் பணியில் சேர்ந்தவர்கள், ஆசிரியர் தகுதிக்கான, 'டெட்' தேர்வில் தேர்ச்சிபெற வேண்டும் என, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த சட்டத்தை, தமிழக அரசும் அமல்படுத்தியுள்ளது.இதன்படி, எட்டாம் வகுப்பு வரை பாடம் எடுக்கும் பணியில் சேரும், பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்கள், தகுதி தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும்.
தகுதி தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள், மார்ச், 31க்கு பின் பணியில் நீடிக்க முடியாது என, அரசு உத்தரவிட்டுள்ளது.இதன் முதற்கட்டமாக, அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும், 1,500 ஆசிரியர்கள் தகுதி தேர்வில் தேர்ச்சி பெறாததால், அவர்களுக்கு, பள்ளி கல்வித்துறை, நோட்டீஸ் அனுப்பியுள்ளது.இதுகுறித்து, உயர்நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது.அரசின் இந்த உத்தரவு, அரசு பள்ளிகளுக்கு மட்டுமின்றி, தனியார் பள்ளிகளுக்கும் பொருந்தும் என்பதால், தனியார் பள்ளி ஆசிரியர்களும், தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
 
இந்நிலையில், ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ள தகுதி தேர்வுக்கு, மார்ச், 15 முதல், ஏப்., 12 வரை விண்ணப்ப பதிவு நடந்தது. ஆறு லட்சத்துக்கும் மேற்பட்டோர், தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர்.தகுதி தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் மீது, தமிழக அரசு திடீர் நடவடிக்கை எடுக்க துவங்கியுள்ளதால், ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் விண்ணப்பிக்க முடிவு செய்துள்ளனர்.எனவே, தகுதி தேர்வுக்கு விண்ணப்பிக்க, கூடுதல் அவகாசம் வழங்க வேண்டும் என, ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்