இன்ஜினியரிங் கட்டண உயர்வு அண்ணா பல்கலை தவிப்பு

சென்னை: இன்ஜினியரிங் மாணவர்களுக்கான கட்டண உயர்வுக்கு, அரசு ஒப்புதல்
அளிக்காததால், கட்டண உயர்வை தள்ளிப் போட, அண்ணா பல்கலைக் கழகம் திட்டமிட்டுள்ளது.

 இன்ஜினியரிங், கட்டண உயர்வு, அண்ணா பல்கலை தவிப்பு


அண்ணா பல்கலை இணைப்பில், 500க்கும் மேற்பட்ட இன்ஜினியரிங் கல்லுாரிகள் செயல்படுகின்றன. அவற்றில், சென்னையில் உள்ள, கிண்டி இன்ஜினியரிங் கல்லுாரி, அழகப்ப செட்டியார் தொழில்நுட்ப கல்லுாரி,
கட்டடவியல் கல்லுாரி மற்றும் குரோம்பேட்டை, எம்.ஐ.டி., கல்லுாரி ஆகியவை, அண்ணா பல்கலையின் நேரடி கல்லுாரிகள்.இவை தவிர, 13 இடங்களில், அண்ணா பல்கலையின் உறுப்பு கல்லுாரிகள் செயல்படுகின்றன.

இந்த கல்லுாரிகளில் சேரும் மாணவர்களுக்கு, ஆண்டுக்கு கல்விக் கட்டணம், 4,000 ரூபாயும், ஆய்வகம், நுாலகம், உள்கட்டமைப்பு, அடையாள அட்டை, விளையாட்டு பயிற்சி, மாணவர் நன்னெறி பயிற்சி என, பல வகைகளில், 18 ஆயிரம் ரூபாய் வரை பெறப்படுகிறது.இந்த கட்டணம், 1999ம் ஆண்டு முதல் பெறப்படுகிறது. இடைப்பட்ட காலத்தில், சிறிய மாற்றங்கள் செய்யப்பட்டன. தற்போது, இக்கட்டணத்தை, 21 ஆயிரம் ரூபாயாக உயர்த்த, அண்ணா பல்கலை திட்டமிட்டுள்ளது. இது குறித்து, பல்கலை நிர்வாகக் குழு மற்றும் சிண்டிகேட் கூட்டங்களில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

அரசின் ஒப்புதல் பெற, 10 நாட்களுக்கு முன், கோப்பு அனுப்பப்பட்டது; இன்னும் ஒப்புதல் கிடைக்கவில்லை. அதே நேரத்தில், மாணவர்களுக்கான கட்டணத்தை உயர்த்துவது குறித்து, அதிகாரிகள் குழுவிடம் ஆலோசனை நடத்தி, முடிவு எடுக்க, உயர் கல்வித் துறை திட்டமிட்டுள்ளது.எனவே, கட்டண உயர்வை, வரும் கல்வி ஆண்டில் அமல்படுத்துவதா அல்லது தள்ளிப் போடுவதா என, அண்ணா பல்கலை நிர்வாகம் குழப்பத்தில் உள்ளது.