தனியார் பள்ளி வாகன ஆய்வு:

சென்னை, :தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளி வாகனங்களில், 10 சதவீதம் மட்டுமே ஆய்வு செய்யப்பட்டு உள்ளதால், மாவட்ட கலெக்டர்கள் தலைமையிலான குழு, ஆய்வு செய்யும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு உள்ளது.


சென்னை, தாம்பரத்தில், தனியார் பள்ளி பஸ்சின் ஓட்டை வழியாக கீழே விழுந்து, 3 வயது மாணவி ஸ்ருதி உயிரிழந்தார். இந்த சம்பவம், 2012ல் நடந்தது. அதன்பின், பள்ளி வாகனங்களுக்காக, சிறப்பு போக்குவரத்து விதிகள் உருவாக்கப்பட்டன.அவற்றை கண்காணிக்க, மாவட்ட கலெக்டர், போக்குவரத்து கமிஷனர், போலீஸ் அதிகாரிகள் தலைமையில் குழு அமைக்கப்பட்டது.ஆய்வுஅந்தக் குழு, ஒவ்வொரு ஆண்டும், பள்ளி வாகனங்களின் தரத்தை, இரண்டு முறை ஆய்வு செய்து, தகுதிச் சான்றிதழ் வழங்குகிறது. பள்ளிகளின் விடுமுறை காலமான, மே மாதத்தில் ஆய்வு நடத்தப்படுகிறது.பள்ளி வாகனங்களின் அவசர காலக்கதவு, டயர்கள், ஹேண்ட் பிரேக், முதலுதவி பெட்டி, வேகக் கட்டுப்பாட்டு கருவி, தீயணைப்பு கருவிகள் போன்றவை ஆய்வு செய்யப்படும். டிரைவர்களின் கண் பார்வை, உடல்தகுதி, உதவியாளர் நிலை உள்ளிட்ட, 16 பாதுகாப்பு அம்சங்களையும் ஆய்வு செய்து, தகுதிச் சான்றிதழ் வழங்கப்படுகிறது.தமிழகத்தில், 30 ஆயிரத்துக்கும் அதிகமான தனியார் பள்ளிகள் உள்ளன. அவற்றில், 34 ஆயிரத்து, 600 வாகனங்கள் உள்ளன. அவற்றை ஆய்வு செய்யும் பணி, மே முதல் வாரத்தில் துவங்கியது.ஆய்வு, இம்மாதம் வரை தொடரும்.இதற்காக, வட்டார போக்குவரத்து அலுவலர்கள் தலைமையில், வருவாய், போலீஸ், கல்வி, தீயணைப்புத்துறை அதிகாரிகள் அடங்கிய குழுவினர் நியமிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் உள்ள, 35 ஆயிரத்து, 600 வாகனங்களில், 3,577 வாகனங்கள் மட்டுமே, இதுவரை ஆய்வு செய்யப்பட்டுள்ளன.தகுதிச் சான்றுஅவற்றில், 3,275 வாகனங்களுக்கு தகுதிச்சான்று வழங்கப்பட்டது. குறைகள் கண்டுபிடிக்கப்பட்டு, மறு ஆய்வுக்கு உத்தரவிடப்பட்ட, 302 வாகனங்களில், 134 தகுதிபெற்றுள்ளன.ஆய்வுக்கு உட்படுத்தப்படாத, 31 ஆயிரத்து, 21 வாகனங்களை, 15 நாட்களுக்குள் ஆய்வு செய்ய வேண்டி உள்ளதால், ஆய்வுக் குழுவினர் மும்முரமாக பணியில் ஈடுபட்டுள்ளனர்.