பயோ மெட்ரிக் வருகைப்பதிவு: விரைந்து பதிவேற்ற உத்தரவு

வரும் கல்வியாண்டில் அரசு பள்ளிகளில் பயோ மெட்ரிக் முறை முழுமையாக அமலாக இருப்பதால் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களின் விவரங்களை ஆன்லைனில் விரைவாக பதிவேற்றம் செய்யுமாறு பள்ளிக்கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.
 வரும் கல்வியாண்டு முதல் பயோமெட்ரிக் வருகைப்பதிவு முறை அறிமுகப்படுத்துவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அனைத்து அரசுப் பள்ளிகளிலும் "எமிஸ்' எனப்படும் கல்வியியல் மேலாண்மைத் தகவல் மையத்தின் இணையதளத்தில் ஆசிரியர்கள், பணியாளர்களின் தகவல்களை முழுமையாக பதிவிட அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதன் மூலமாகவே மாணவர்களின் திட்டங்களும், ஆசிரியர்களின் பொது மாறுதல் கலந்தாய்வு, பதவி உயர்வு கலந்தாய்வு போன்றவை நடைபெறவுள்ளன. அனைத்து மாணவர்களுக்கும் விரைவில் ஸ்மார்ட் அட்டை வழங்கப்படவுள்ளதால், மாணவர்களின் புகைப்படம் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் பதிவேற்றும் பணிகளை விரைந்து முடிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.