இலவச மாணவர் சேர்க்கை பள்ளிகளுக்கு ரூ. 59 கோடிஉதவி

சென்னை:கட்டாய கல்வி சட்டப்படி, இலவச மாணவர் சேர்க்கைக்காக, தனியார் பள்ளிகளுக்கு முதல் கட்டமாக, 59 கோடி ரூபாய், அரசு தரப்பில் வழங்கப்பட்டுள்ளது.


கட்டாய மற்றும் இலவச கல்வி உரிமை சட்டம், 2009ல் அமலானது. இந்த சட்டப்படி, 14 வயது வரையிலான மாணவர்களுக்கு கட்டாயம் கல்வி வழங்க வேண்டும்.இதற்காக, கட்டாய கல்வி சட்டத்தில், தனியார் பள்ளிகளில் மாணவர்களைச்சேர்க்க, சலுகை வழங்கப்பட்டுள்ளது. அதாவது, கட்டாய கல்வி சட்டப்படி, தனியார் தொடக்க மற்றும் மெட்ரிக்பள்ளிகளில், நுழைவு வகுப்பான, எல்.கே.ஜி., அல்லது ஒன்றாம் வகுப்பில், 25 சதவீத இடங்களை ஒதுக்க வேண்டும்.

இதன்படி, தமிழகத்தில், 'ஆன்லைன்'விண்ணப்ப முறையில், நர்சரி மற்றும் மெட்ரிக் பள்ளி களில், 25 சதவீத இடங்களில், இலவசமாக மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர்.இந்த மாணவர்கள், தங்களது கல்விக்கட்டணத்தை, பள்ளிக்கு செலுத்த வேண்டாம்;அதற்கு பதில், பள்ளிக்கான கல்விக்கட்டணத்தை, அரசே செலுத்தும்.இதன்படி, இரண்டு ஆண்டுகளாக, இலவச மாணவர் சேர்க்கைக்கான கல்விக்கட்டணமாக, 300 கோடி ரூபாய் நிதியை,பள்ளிகளுக்கு அரசு வழங்க வேண்டியுள்ளது.

இந்த நிதியை விரைந்து வழங்கும்படி, பள்ளிகள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதையடுத்து, முதல் கட்டமாக, 14 மாவட்டங்களில் உள்ள, 1,431 பள்ளிகளுக்கு, 59 கோடி ரூபாய் நிதி வழங்கப்பட்டுள்ளது. மற்ற மாவட்டங்களுக்கும் விரைவில் நிதி வழங்கப்படும் என, பள்ளிகல்வி அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

வரும் கல்வி ஆண்டுக்கான, இலவச மாணவர் சேர்க்கை நடந்து வரும் நிலையில், பள்ளிகளில் நிதி நெருக்கடியை சமாளிக்கவும், இந்த ஆண்டு இலவச மாணவர் சேர்க்கையை நடத்தவும், அரசு தரப்பில் தற்போது நிதி வழங்கப்பட்டுள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.