'விஷன் 2021' கொள்கை வெளியீடு; மின்னணு பணப் பரிவர்த்தனையை ஊக்குவிக்கும்

மும்பை: ரிசர்வ் வங்கி, பாதுகாப்பான மின்னணு பணப் பரிவர்த்தனைகளை ஊக்குவிக்க, 'விஷன் 2021' என்ற தொலைநோக்கு கொள்கையை வெளியிட்டுள்ளது.

மின்னணு தொழில்நுட்பத்தில், கணினி, மொபைல் போன் ஆகியவற்றின் மூலம் மேற்கொள்ளப்படும் பணப் பரிவர்த்தனைகள், நாள்தோறும் அதிகரித்து வருகின்றன. மிகச் சுலபமாகவும், அதேசமயம் விரைவாகவும் பணப் பரிவர்த்தனைகளை மேற்கொள்ள முடிவதால், ஏராளமானோர், மின்னணு பணப் பரிவர்த்தனைகளுக்கு மாறி வருகின்றனர்.

கடந்த, 2018 டிசம்பர் நிலவரப்படி, 2,069 கோடிக்கும் அதிகமான, மின்னணு பணப் பரிவர்த்தனைகள் நடைபெற்றுள்ளன. இதை, 2021 டிசம்பரில், நான்கு மடங்காக அதிகரித்து, 8,707 கோடியாக உயர்த்த, ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளது. இதற்காக, 'விஷன் 2019- - 21' என்றமின்னணு பணப் பரிவர்த்தனை கொள்கையை, ரிசர்வ் வங்கி உருவாக்கியுள்ளது.

இது குறித்து, இவ்வங்கி வெளியிட்டுள்ள அறிக்கை: மூன்று ஆண்டுகளுக்கு முன் வெளியிடப்பட்ட, 'விஷன் 2016 -- 18' கொள்கை, மின்னணு பணப் பரிவர்த்தனைகளின் துவக்க கால நிலை, வளர்ச்சி ஆகியவற்றை கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டது.

நான்கு அம்சங்கள்:

தற்போது, 'போட்டி, சிக்கனம், வசதி, நம்பிக்கை' என்ற நான்கு அம்சங்கள் அடிப்படையில், மின்னணு பணப் பரிவர்த்தனை நடைமுறைகளுக்கான, 'விஷன் 2019- - 21' கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது. இதில், மின்னணு பணப் பரிவர்த்தனைகளுக்கு அடிப்படையான, 'யு.பி.ஐ., மற்றும் ஐ.எம்.பி.எஸ்., பயன்பாட்டின் ஆண்டு வளர்ச்சியை, 2021 டிசம்பருக்குள், 100 சதவீதம் உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், பெருந்தொகையை மின்னணு முறையில் அனுப்ப உதவும், 'நெப்ட்' பயன்பாட்டை, 40 சதவீதம் அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.


மின்னணு பணப் பரிவர்த்தனைக்காக, வங்கிகள், நிதிச் சேவை நிறுவனங்கள் ஆகியவை, வாடிக்கையாளர்களிடம் வசூலிக்கும் தொகையை, கட்டுக்குள் வைக்க, இக்கொள்கை வழிகாட்டும். மேலும், மின்னணு பணப் பரிவர்த்தனைகள் குறித்து, மக்களிடம் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்படும். இதற்காக, 24 மணி நேர சேவை மையங்கள் ஏற்படுத்தப்படும். இத்துறைக்காக, சுய ஒழுங்குமுறை கட்டுப்பாட்டு அமைப்பு உருவாக்கப்படும்.

இதன் மூலம், மின்னணு பணப் பரிவர்த்தனைகள் அதிகரிக்கும். இந்த வகையில், புதிய கொள்கையில், 36 செயல் திட்டங்கள் இடம் பெற்றுள்ளன. வாடிக்கையாளர்கள் சுலபமாகவும், அதேசமயம் பாதுகாப்பாகவும் பணப் பரிவர்த்தனை மேற்கொள்ள, இக்கொள்கை வழிகாட்டும். மின்னணு பணப் பரிவர்த்தனையில், பாதுகாப்பில் சிறிதும் சமரசத்திற்கு இடம் கொடுக்கக் கூடாது என்பதே, இக்கொள்கையின் தலையாய நோக்கம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.