பிளஸ் 1 மாணவர் சேர்க்கை இடஒதுக்கீட்டுக்கு உத்தரவு

சென்னை:'பிளஸ் 1 வகுப்புக்கான, மாணவர் சேர்க்கையில், அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளும், இடஒதுக்கீட்டு முறையை பின்பற்ற வேண்டும்' என, பள்ளி கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.


பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள், ஒரு வாரத்திற்கு முன் அறிவிக்கப்பட்டன. தேர்ச்சி பெற்ற மாணவர்கள், பிளஸ் 1 படிப்பில் சேரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். சென்னையில் மட்டும், பல தனியார் பள்ளிகளில், மூன்று மாதங்களுக்கு முன், பிளஸ் 1க்கான சேர்க்கை, முடிக்கப்பட்டு விட்டது. தற்போது, மதிப்பெண் அடிப்படையில், பாடப்பிரிவுகள் மட்டுமே, ஒதுக்கப்படுகின்றன.

மற்ற மாவட்டங்களில், விதிகளை பின்பற்றி, பிளஸ் 1க்கு விண்ணப்பம் பெறப்பட்டு, மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. இந்த சேர்க்கையில், தமிழக அரசின் இடஒதுக்கீட்டு முறையை பின்பற்றி, மாணவர்களை சேர்க்கும்படி, பள்ளிகளுக்கு, இயக்குனர் ராமேஸ்வர முருகன், சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.

பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு, 30 சதவீதம்; மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு, 20; பட்டியலினத்தவருக்கு, 18 மற்றும் பழங்குடியினருக்கு, 1 சதவீதம் என, இட ஒதுக்கீடு செய்து, மாணவர்களை சேர்க்க வேண்டும். இந்த விதிகளை மீறினால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, பள்ளிகள் எச்சரிக்கப்பட்டுள்ளன.