1, 6, பிளஸ் 1 புத்தகங்களில் மாற்றம் பாட நூல் கழகத்தில் அரசு நிதி வீண்

சென்னை, தமிழக பள்ளி கல்வித்துறையின், புதிய பாடத் திட்டத்தில், ஒன்று, ஆறு மற்றும் பிளஸ் 1 வகுப்புகளுக்கான புத்தகங்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
ஏற்கனவே, ஏராளமாக அச்சிடப்பட்டுள்ள பழைய புத்தகங்களால், அரசின் நிதி வீணாகியுள்ளது.தமிழக பள்ளி கல்வித்துறையின் பாடத் திட்டம், 13 ஆண்டுகளுக்கு பின், 2018 - 19ம் கல்வியாண்டில் மாற்றப்பட்டது. இந்த ஆண்டில், ஒன்று, ஆறு, ஒன்பது மற்றும் பிளஸ் 1 வகுப்புகளுக்கு மட்டும், புதிய பாட திட்டம் அறிமுகமானது.இதையடுத்து, 2019 - 20ல், அதாவது, அடுத்த மாதம் துவங்க உள்ள கல்வி ஆண்டில், அனைத்து வகுப்புகளுக்கும், புதிய பாடத் திட் டம் அமலுக்கு வருகிறது.இதற்கிடையில், 2018 - 19ல் அறிமுகமான பாடப் புத்தகங்களில், ஏராளமான பிழைகள் இருந்தன. இவற்றை, ஆரம்பத்திலேயே திருத்தம் செய்யாமல், லட்சக்கணக்கான புத்தகங்கள் அச்சிடப்பட்டன.ஆனால், பெற்றோர் மற்றும் கல்வியாளர்கள், பாடப் புத்தகங்களில் உள்ள பிழைகளை சுட்டிக் காட்டியதால், மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம், தனியாக குழு அமைத்து, பிழைகளை திருத்த உத்தரவிட்டது.பிழைகள் திருத்தப்பட்டதில், ஒன்று, ஆறு மற்றும் பிளஸ் 1 வகுப்புகளின் பாடப் புத்தகங்களில், பல பகுதிகள் மாற்றப்பட்டன. இந்த புத்தகங்களையே, புதிய கல்வி ஆண்டு மாணவர்களுக்கு வழங்க வேண்டும் என, பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டது.அதனால், மாற்றப்பட்ட புத்தகங்களை, தமிழ்நாடு பாடநுால் மற்றும் கல்வி சேவை கழகம் அச்சிட்டு, விற்பனைக்கு வெளியிட்டுள்ளது. அதேநேரம், பள்ளி கல்வியின் திருத்தம் நடந்த போதே, பழைய புத்தகங்களை, பாடநுால் கழகம் ஆயிரக்கணக்கில் அச்சிட்டுள்ளது.இந்த புத்தகங்களை, தற்போது பயன்படுத்த முடியாததால், அரசின் நிதி வீணாகியுள்ளது. புத்தகம் அச்சடிப்பு, காகிதம் கொள்முதல், சரக்கு போக்குவரத்து செலவு என, பல லட்சம் ரூபாய்க்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.பாடநுால் கழகத்தின் இயக்குனர், பழனிசாமி, மேலாண்மை இயக்குனர், ஜெயந்தி ஆகியோரிடம், அரசு தரப்பில் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.ஏற்கனவே, சமச்சீர் கல்வி திட்டம் அறிமுகமான போது, 2011ல், தமிழக பாடநுால் கழகத்தில், இதேபோன்று, பழைய பாடத் திட்டத்தில், ஏராளமான புத்தகங்கள் அச்சிடப்பட்டு, அவை, பழைய காகித மூட்டைகளாகி, அரசின் நிதி, கோடி கணக்கில் வீணானது.