இந்திய பெருங்கடலில் புயல்: தமிழகத்தில் மழை

சென்னை, கோடை வெயில் கொளுத்தும் நிலையில், இந்திய பெருங்கடலில், புதிய புயல் சின்னம் உருவாகும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த புயல், சென்னை அருகே கரையை
கடக்கலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.நாடு முழுவதும், மார்ச் முதல், கோடை வெயில் கொளுத்துகிறது. வழக்கமாக, மே இரண்டாவது வாரம் அல்லது ஜூன் முதல் வாரத்தில், தென்மேற்கு பருவ மழை துவங்கும். இந்த ஆண்டு முன்கூட்டியே துவங்குவதற்கான வாய்ப்புகள் உருவாகியுள்ளன. அதற்கேற்ற வகையில், கடலியல் சூழல்கள் மாறியுள்ளன.இதன் ஆரம்ப கட்டமாக, காற்றழுத்த தாழ்வு மற்றும் வெப்பச் சலனம் காரணமாக, பல இடங்களில் மழை கொட்டியுள்ளது. சேலம், ஆத்துாரில் அதிகபட்சம், 10 செ.மீ., மழை பதிவாகியுள்ளது. நேற்று காலை, 8:30 மணியுடன் முடிவடைந்த, 24 மணி நேரத்தில், தமிழகத்தில் பதிவான மழை அளவு: பெரியகுளம், தம்மம்பட்டி, 6; கூடலுார், மேட்டூர், திருவண்ணாமலை, ஓசூர், 5; கிருஷ்ணகிரி, தென்காசி, செங்கோட்டை, சிவகிரி, ஆய்க்குடி, கொடைக்கானல், போளூர், 4 செ.மீ., மழை பெய்துள்ளது.தர்மபுரி, ஊத்தங்கரை, காஞ்சிபுரம், சத்திரபட்டி, உத்தமபாளையம், பீளமேடு, 3; பையூர், ஆர்.எஸ்.மங்கலம், மேலுார், ஓமலுார், பவானி, ஈரோடு, திருபுவனம், பென்னாகரம், பேச்சிப்பாறை, திருமயம், ஆண்டிபட்டி, திருவள்ளூர், வால்பாறை, 2; செ.மீ., மழை பதிவாகியுள்ளது. தேன்கனிகோட்டை, போடி நாயக்கனுார், குன்னுார், திருப்பத்துார், சேலம், ஊட்டி, கரூர் பரமத்தி, தேவாலா, பழனி, பாலக்கோடு, பெருந்துறை, தளி, ஏற்காடு, நடுவட்டம், குன்னுார், திண்டுக்கல், போச்சம்பள்ளி மற்றும், கொடுமுடியில், 1 செ.மீ., மழை பெய்துள்ளது.புயல் சின்னம்இந்நிலையில், இந்திய பெருங்கடலில், புதிய புயல் சின்னம் உருவாகியுள்ளதாக, இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது. இந்திய பெருங்கடலில், இலங்கைக்கு தென் கிழக்கில், காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது. இது, நாளை மறுநாள், காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெறும்.இந்த தாழ்வு பகுதி, 27ம் தேதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, இலங்கையின் கிழக்கு பகுதி வழியே, வங்க கடலில் நுழைந்து, புயலாக மாறும். வரும், 29ம் தேதி, இந்த புயல், கடலோர மாவட்டங்கள் வழியாக, தமிழகத்தின் வட கிழக்கு கடலோர பகுதிகளை நெருங்கும்.அப்போது, ராமேஸ்வரம் முதல் சென்னை வரை, இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இந்த புயல், மேலும் வலுப்பெற்று, ஏப்., 30ல் இருந்து, மே, 1க்குள், நாகை, சென்னை இடையே, கரையை கடக்கும் வாய்ப்புள்ளது என, இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.எச்சரிக்கைஇதுகுறித்து, சென்னை மண்டல வானிலை மைய இயக்குனர், புவியரசன் கூறியதாவது: வரும், 25ம் தேதி, குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும். பின், காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நகரும்; 29ம் தேதி, புயலாக மாறும். இதனால், தமிழகத்தின் கடலோர பகுதிகளில், இடியுடன் கூடிய கன மழை பெய்யும். இந்த புயல், சென்னை, நாகை இடையே, கரையை கடக்கலாம் என, கணித்துள்ளோம். இந்த நிலை, வரும் நாட்களில் மாறும்.இவ்வாறு, அவர் கூறினார். அடுத்த நான்கு நாட்களை பொறுத்தவரை, தமிழகத்தின் பல இடங்களில், வெப்பச் சலன மழைக்கு வாய்ப்புள்ளது. சில இடங்களில், இடி, மின்னல், சூறைக்காற்றுடன் திடீர் மழை பெய்யலாம் என, வானிலை மையம் அறிவித்துள்ளது.