தேர்தல் பயிற்சியில் அரசுப்பள்ளி ஆசிரியை மாரடைப்பால் மரணம்

ஆசிரியை மாரடைப்பால் மரணம்



சேலம் மாவட்டம் , கொங்கணாபுரம் ஒன்றியம் , தேவனூர் , ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பணிபுரிந்து வந்த ஆங்கில பட்டதாரி ஆசிரியை திருமதி.நித்யா (34) அவர்கள் இன்று 07.04.2019 நாடாளுமன்ற தேர்தல் பயிற்சியின் போது சுமார் 12.30 மணியளவில் திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் இயற்கை எய்தினார் என்பதை ஆழ்ந்த வருத்ததுடன் தெரிவித்துக் கொள்கிறோம்..
சேலத்தில் தேர்தல் பயிற்சிக்கு வந்த பள்ளி ஆசிரியை நித்யா மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
 
தமிழகத்தில் வரும் 18ம் தேதி மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடக்கிறது. மே 23ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கிறது. இதையொட்டி வாக்குச்சாவடி மையங்கள் மற்றும் வாக்கு எண்ணிக்கை மையங்களில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.
வாக்குச்சாவடிகளில் பணியாற்ற வாக்குச்சாவடி முதன்மை அலுவலர் மற்றும் வாக்குச்சாவடி பணிகளில் பெரும்பாலும் ஆசிரியர்களே நியமிக்கப்பட்டு உள்ளனர். இம்மையங்களில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு வழிகாட்டுதல் பயிற்சி முகாம் சேலத்தில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இதற்கான இரண்டாம் கட்ட பயிற்சி இன்று சேலத்தில் நடைபெற்றது. தேவானூர் அரசு நடுநிலைப்பள்லி ஆசிரியராகப் பணியாற்றி வந்தவர் நித்யா. 34 வயதான இவர் மின்னாம்பள்ளியில் தனியார் கல்லூரியில் நடைபெற்ற இரண்டாம் கட்ட பயிற்சியில் இன்று கலந்து கொண்டார். அப்போது, நித்யாவுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதாக தெரிகிறது.
இதையடுத்து அங்கிருந்த அலுவலர்கள் சேலம் அரசுமருத்துவமனைக்கு நித்யாவை அழைத்து வந்துள்ளனர். அவரை சோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே நித்யா உயிரிழந்ததாக தெரிவித்தனர்.
உயிரிழந்த நித்யா திருச்சி மாவட்டத்தை சேர்ந்தவர் என கூறப்படுகிறது. இதுகுறித்த தகவலறிந்த அரசு முதன்மை கல்வி அலுவர் கணேஷ்மூர்த்தி மருத்துவமனைக்கு நேரில் வந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார். மேலும் இதுகுறித்து விசாரணை நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் பயிற்சிக்காக வந்த ஆசிரியை நித்யா உயிரிழந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் பயிற்சியை தொடர்ந்து தபால் வாக்குகள் அளிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.