இன்ஜி., கவுன்சிலிங் எப்போது

சென்னை, பிளஸ் 2 தேர்வு முடிவு இன்று வெளியாகும் நிலையில் தமிழக அரசின்
இன்ஜினியரிங் மாணவர் சேர்க்கை கவுன்சிலிங் இன்னும் அறிவிக்கப்படவில்லை.கலை அறிவியல் கல்லுாரிகளில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப வினியோகம் துவங்கி விட்டன. அதேபோல் இன்ஜினியரிங் படிப்பில் சேர விரும்புவோருக்கும் விண்ணப்பங்களை வழங்க வேண்டும்.ஒவ்வொரு ஆண்டும் பிளஸ் 2 தேர்வு முடிவு வருவதற்கு ஒரு வாரத்துக்கு முன்பே அண்ணா பல்கலையில் இன்ஜி. கவுன்சிலிங் விண்ணப்ப பதிவு துவங்கும். ஆனால் இந்த ஆண்டு அண்ணா பல்கலை சார்பில் கவுன்சிலிங் நடத்தப்படாது என துணை வேந்தர் சுரப்பா அறிவித்து விட்டார்.அதை தொடர்ந்து உயர் கல்வி துறையின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் வாயிலாக இன்ஜினியரிங் கவுன்சிலிங் நடத்தப்படும் என தமிழக உயர் கல்வி அமைச்சர் அன்பழகனும் செயலர் மங்கத் ராம் சர்மாவும் அறிவித்தனர்.ஆனால் இன்ஜினியரிங் சேர்க்கைக்கு விண்ணப்ப பதிவுகள் எப்போது துவங்கும் என்பதை இன்னும் அறிவிக்கவில்லை. 2018 - 19ம் கல்வி ஆண்டில் 'ஆன்லைன்' கவுன்சிலிங் நடத்தப்பட்டது. விண்ணப்ப பதிவுகளும் ஆன்லைனில் மேற்கொள்ளப்பட்டன.அதேபோன்று இந்த ஆண்டும் ஆன்லைன் கவுன்சிலிங் நடத்தப்படுமா அல்லது விண்ணப்பங்கள் வழங்கப்படுமா என்ற விபரங்களை உயர் கல்வி துறை வெளியிடவில்லை. அதனால் இன்ஜினியரிங் சேர விரும்பும் மாணவர்கள் குழப்பத்தில் உள்ளனர்.