முதுநிலை மருத்துவ கலந்தாய்வு எதிர்த்த வழக்கு: ஐகோர்ட் தள்ளுபடி

மதுரை : முதுநிலை மருத்துவ படிப்பு கலந்தாய்வு அடிப்படையில் வெளியான தேர்வுப் பட்டியலை ரத்து செய்ய தாக்கலான வழக்கை, உயர் நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்தது.துாத்துக்குடி தங்கபாண்டியன் தாக்கல் செய்த மனுவில்
கூறியதாவது:தமிழகத்தில் முதுநிலை மருத்துவ படிப்பிற்கான, நீட் தேர்வு, 2019 ஜனவரியில் நடந்தது. வெற்றி பெற்றவர்கள் பட்டியல் வெளியானது. தமிழக அரசின், 50 சதவீத ஒதுக்கீட்டு இடங்களில், மாணவர்கள் சேர்க்கை, முதல் கட்ட கலந்தாய்வு நடந்தது. தேர்வானவர்களின் பட்டியல் இணையத்தில் வெளியானது.மலைப்பகுதியில் பணிபுரிந்த டாக்டர்களுக்கு, முதுநிலை மருத்துவ படிப்பில் சேர கருணை மதிப்பெண் வழங்கப்படும். குறைந்த ஆண்டுகள் மலைப்பகுதியில் பணிபுரிந்த ஒருவருக்கு, விதிகளை மீறி, 30 சதவீத மதிப்பெண் வழங்கப்பட்டுள்ளது. கலந்தாய்வில் விதிமீறல்கள் நடந்துள்ளன. 2019, முதுநிலை மருத்துவப் படிப்பு, முதல் கட்ட கலந்தாய்வில் தேர்வு செய்யப்பட்டு, ஏப்.,2ல் வெளியிட்ட தேர்வுப் பட்டியலை ரத்து செய்ய வேண்டும். புதிதாக கலந்தாய்வு நடத்தி, பட்டியல் வெளியிட தமிழக அரசுக்கு உத்தரவிடவேண்டும்.இவ்வாறு, மனுவில் கூறியிருந்தார்.நீதிபதிகள், பி.என்.பிரகாஷ், பி.புகழேந்தி அமர்வு விசாரித்தது. அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் அளித்த விளக்கம்:உச்ச நீதிமன்ற உத்தவுப்படி, மே மாதத்திற்குள் கலந்தாய்வு நடத்தி, அதே மாதத்தில் வகுப்புகளை துவக்க வேண்டும். மலைப்பகுதி மற்றும் இதர பகுதிகளின் எல்லை வரையறை தொடர்பாக, தீர்வு காண ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில், குழு அமைக்கப்பட்டு உள்ளது.இவ்வாறு, விளக்கம் அளித்தார்.இதை பதிவு செய்த நீதிபதிகள், வழக்கை தள்ளுபடி செய்தனர்.