பள்ளிகளில் இலவச, 'அட்மிஷன்' விண்ணப்ப பதிவு துவக்கம்

சென்னை : தனியார் பள்ளிகளில், கல்வி கட்டணமின்றி படிப்பதற்கான, 25 சதவீத மாணவர் சேர்க்கை பதிவு, நேற்று துவங்கியது. விண்ணப்பங்களை, மே, 18க்குள்
சமர்ப்பிக்க வேண்டும்.மத்திய - மாநில அரசுகளின் கட்டாய கல்வி உரிமை சட்டப்படி, சிறுபான்மை அந்தஸ்து பெறாத, அனைத்து மெட்ரிக், சி.பி.எஸ்.இ., பள்ளிகளிலும், 25 சதவீத இடத்தில், எல்.கே.ஜி., அல்லது ஒன்றாம் வகுப்பில் மாணவர்களை இலவசமாக சேர்க்க வேண்டும்.இந்த திட்டத்தில் இடம் பெற்றுள்ள பள்ளிகளில், நுழைவு வகுப்பாக, எல்.கே.ஜி., அல்லது ஒன்றாம் வகுப்பு இருந்தால், அந்த வகுப்புகளில் மாணவர்களை சேர்க்க வேண்டும்.

இதன்படி மாணவர்களை சேர்ப்பதற்கான, ஆன்லைன் விண்ணப்ப பதிவு, நேற்று துவங்கியது. விண்ணப்ப பதிவை, மே, 18க்குள் மேற்கொள்ள அவகாசம் தரப்பட்டுஉள்ளது. தமிழக பள்ளி கல்வி துறையின், http://rte.tnschools.gov.in/tamil-nadu என்ற, இணையதள இணைப்பில் பதிவுகளை மேற்கொள்ளலாம்.இதில், பெற்றோர், அவரவர் இடங்களில் இருந்தும் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். அதேபோல, மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்கள், மாவட்ட கல்வி அலுவலகங்கள், வட்டார கல்வி அலுவலகங்கள், ஒருங்கிணைந்த கல்வி திட்ட அலுவலகங்களில், இணையதளத்தில் பதிவு செய்ய வசதி செய்யப்பட்டுள்ளது.

இந்த அலுவலகங்களின் முகவரிகளை அறிய, அருகில் உள்ள, அரசு மற்றும் தனியார் பள்ளிகளை தொடர்பு கொள்ளலாம்.மாவட்ட கலெக்டர் அலுவலகம், துணை கலெக்டர் அலுவலகம் போன்றவற்றில், மக்கள் தொடர்பு அலுவலர்களிடமும் தெரிந்து கொள்ளலாம்.