மக்களவைத் தேர்தலில் 71.87% வாக்குப்பதிவு; இடைத் தேர்தலில் 75.57% வாக்குப்பதிவு: சத்யபிரதா சாகு

சென்னை: தமிழகத்தில் நடைபெற்ற 38 மக்களவைத் தொகுதிக்கான தேர்தலில் 71.87% வாக்குகள் பதிவாகியுள்ளன என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.


அதே சமயம், 18 பேரவைத் தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் 75.57% வாக்குகள் பதிவாகியுள்ளன.
2019 பொதுத்தேர்தலில் பதிவான வாக்குகள் தொடர்பாக சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார் சத்யபிரதா சாகு.
அப்போது அவர் கூறியதாவது, தமிழகத்தில்38 தொகுதிகளுக்கான மக்களவைத் தேர்தலில் ஒட்டுமொத்தமாக 71.87% வாக்குகள் பதிவாகின. அதிகபட்சமாக தருமபுரியில் 85.49% சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. குறைந்தபட்சமாக தென் சென்னை தொகுதியில் 56.41% வாக்குகள் பதிவாகின.
அதே சமயம், 18 பேரவைத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தலில் ஒட்டுமொத்தமாக 75.57% வாக்குகள் பதிவாகின. அதிகபட்சமாக சோளிங்கர் தொகுதியில் 82.26% வாக்குகளும், குறைந்தபட்சமாக பெரம்பூரில் 64.17% வாக்குகளும் பதிவாகியுள்ளது.
தமிழகத்தில் திருப்பரங்குன்றம் உள்ளிட்ட 4 தொகுதிகளுக்கு மே 19ம் தேதி நடைபெற உள்ள இடைத்தேர்தல் தொடர்பான அறிவிக்கை விரைவில் வெளியிடப்படும். அந்த தேர்தலின் போது வாக்களிக்கும் வாக்காளர்களுக்கு நடுவிரலில் மை வைக்கப்படும் என்று தெரிவித்தார்.