மாலை 6 மணி நிலவரம்: மக்களவைக்கு 69.55 சதவீதம் வாக்குப்பதிவு

தமிழகத்தில் மாலை 6 மணி நிலவரப்படி 69.55 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.
தமிழகம் முழுவதும் 38 மக்களவைத் தொகுதிகளுக்கான தேர்தல் (வேலூர் தவிர்த்து)
மற்றும் 18 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் இன்று (வியாழக்கிழமை) ஒரே கட்டமாக நடைபெற்று வருகிறது.
காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறுகிறது.
இந்நிலையில், வாக்காளர்கள் அனைவரும் காலை முதலே ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.
மிகவும் பரபரப்பாக நடைபெற்று வரும் தேர்தலில் மாலை 6 மணி நிலவரப்படி 69.55 சதவீத வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்தார்.
அதிகபட்சமாக நாமக்கல் தொகுதியில் 78 சதவீதமும், சிதம்பரம் தொகுதியில் 76.03 சதவீதமும், கள்ளக்குறிச்சியில் 75.18 சதவீதமும் பதிவாகியுள்ளது.
குறைந்தபட்சமாக சென்னை சென்ட்ரலில் 57.05 சதவீத வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது.
மதுரையில் 6 மணி நிலவரப்படி 60.12 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. மதுரையில் 8 மணி வரை வாக்குப்பதிவு நீட்டிக்கப்பட்டுள்ளது.
இன்னும் ஒரு சில தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருவதால் இதை இறுதியானதாக கருதமுடியாது. மதுரையிலும் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு 8 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதனால், மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு சதவீதம் மேலும் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மக்களவைத் தேர்தலுக்கான இறுதி வாக்குப்பதிவு சதவீதம் 70 முதல் 72 சதவீதம் வரை எதிர்பார்க்கப்படுவதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்தார்.
18 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்:
சட்டப்பேரவை இடைத்தேர்தலில் மாலை 6 மணி நிலவரப்படி 71.62 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. அதிகபட்சமாக அரூர் சட்டப்பேரவைத் தொகுதியில் 86.96 சதவீத வாக்குகளும், குறைந்தபட்சமாக சாத்தூர் தொகுதியில் 60.87 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளது.