மே 19 ல் 4 தொகுதி இடைத்தேர்தல்

புதுடில்லி : திருப்பரங்குன்றம் உள்ளிட்ட 4 தொகுதிகளுக்கு மே 19 ல் இடைத்தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.





தமிழகத்தில் லோக்சபா தேர்தலுடன் சேர்த்து, காலியாக உள்ள 18 சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தல் ஏப்ரல் 18 ம் தேதி நடக்க உள்ளது. மீதமுள்ள திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, சூலூர். ஒட்டப்பிடாரம் ஆகிய 4 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் எப்போது நடத்தப்படும் என எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில், வரும் மே 19 அன்று 4 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தப்பட உள்ளதாக தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. வழக்குகளை காரணம் காட்டி நிறுத்தி வைக்கப்பட்ட திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி தொகுதிகளுக்கும் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது..



இந்த 4 தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் ஏப்ரல் 22 ம் தேதி துவங்க உள்ளது. ஏப்ரல் 29 ம் தேதி வேட்புமனு தாக்கலுக்கு கடைசி நாள். ஏப்ரல் 30 அன்று வேட்புமனுக்கள் பரிசீலிக்கப்பட உள்ளன. மே 19 ம் தேதி பதிவாகும் ஓட்டுக்கள் மே 23 அன்று எண்ணப்பட உள்ளன. மனோகர் பரீக்கர் இறந்ததை அடுத்து காலியாக உள்ள கோவாவிலும் மே 19 ல் இடைத்தேர்தல் நடத்தப்பட உள்ளதாக தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. மே 19 அன்று லோக்சபா தேர்தலுக்கான 7 ம் கட்ட ஓட்டுப்பதிவும் நடத்தப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.