குரூப் 1 முதன்மைத் தேர்வு: ரூ.200 தேர்வுக் கட்டணம்: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

குரூப் 1 முதன்மை தேர்வினை எழுத கட்டண விலக்கு கோராதவர்கள் ரூ.200 கட்டணம் செலுத்த வேண்டுமென தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. இதுகுறித்து, டி.என்.பி.எஸ்.சி., செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:-
குரூப் 1 பிரிவில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு நடந்த முதல் நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்றோருக்கு முதன்மைத் தேர்வு நடைபெறவுள்ளது.
இந்தத் தேர்வில் பங்கேற்க மூலச் சான்றிதழ்களை வரும் 26-ஆம் தேதிக்குள்ளாக தேர்வாணைய இணையதளத்தில் அரசு இணைய சேவை மையங்கள் வழியாக பதிவேற்றம் செய்ய வேண்டும்.
இவ்வாறு சான்றிதழ்களை பதிவேற்றம் செய்யாவிட்டால் விண்ணப்பதாரர்கள் முதன்மைத் தேர்வில் கலந்து கொள்ள விருப்பமில்லை எனக் கருதப்படும்.
 
அவர்களது விண்ணப்பம் பரிசீலனைக்கு ஏற்கப்படாது.
மேலும், முதல் நிலை எழுத்துத் தேர்வுக்கு கட்டண விலக்கு கோராத விண்ணப்பதாரர்கள் அனைவரும் முதன்மைத் தேர்வுக்கான தேர்வுக் கட்டணமாக ரூ.200 அரசுப் பணியாளர் தேர்வாணைய இணையத்தில் வரும் 26-ஆம் தேதிக்குள்ளாக செலுத்த வேண்டும்.
தவறினால் விண்ணப்பம் நிராகரிக்கப்படும். தேர்வுக் கட்டணம் செலுத்த வேண்டிய விண்ணப்பதாரர்கள் கட்டணம் செலுத்திய பின்னரே அவர்கள் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய முடியும் என்று டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது.