சமூக வலைதளங்களில், 'மீம்ஸ்' பதிவிடும் ஊழியர்கள் மீது, நடவடிக்கை எடுக்க கோரிக்கை

அமைச்சர் மற்றும் துறையை விமர்சித்து, சமூக வலைதளங்களில், 'மீம்ஸ்' பதிவிடும் ஊழியர்கள் மீது, நடவடிக்கை எடுக்கும்படி, மண்டல இணை பதிவாளர்களை, கூட்டுறவு துறை அறிவுறுத்தி உள்ளது.தமிழகத்தில், கூட்டுறவு ரேஷன் கடைகளில் பணிபுரியும் ஊழியர்கள், ஊதிய உயர்வு கேட்டு, போராடி வருகின்றனர்.அவர்களுக்கு, ஊதிய உயர்வு வழங்குவது குறித்து பரிசீலிக்க, 2018ல், தனி குழு அமைக்கப்பட்டது. அந்த குழுவின் பரிந்துரை அடிப்படையில், ஊதிய உயர்வுக்கு பதில், இடைக்கால நிவாரணமாக, ஊக்கத்தொகை வழங்க முடிவு செய்யப்பட்டது.லோக்சபா தேர்தல் தேதி
இம்மாதம், 10ம் தேதி அறிவிக்கப்பட்டது. உடனே நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததால், அரசால், ஊக்கத்தொகை அறிவிக்க முடியவில்லை. தேர்தலை முன்னிட்டு, ரேஷன் ஊழியர்கள் சங்கத்தினரும், அரசுக்கு எதிரான பிரசாரம் செய்து வருகின்றனர்.இந்நிலையில், ஊதிய உயர்வு வழங்க, உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி, கூட்டுறவு துறை அமைச்சர், ராஜுவை விமர்சித்து, சமூக வலைதளங்களில், 'மீம்ஸ்'கள் பதிவிடப்படுகின்றன.இதனால், துறை மற்றும் அமைச்சரை விமர்சித்து, மீம்ஸ்கள், எஸ்.எம்.எஸ்., அனுப்பும் ஊழியர்கள் மீது, நடவடிக்கை எடுக்குமாறு, இணை பதிவாளர்களை, கூட்டுறவு துறை அறிவுறுத்தியுள்ளது