எளிமையான, எதிர்பார்த்த வினாக்கள் உயிரியல் தேர்வெழுதிய மாணவர்கள் மகிழ்ச்சி

விருதுநகர், பிளஸ் 2 அரசு பொதுத்தேர்வு உயிரியல் பாட வினாக்கள் எளிமையாகவும்,
எதிர்பார்த்ததாகவும் இருந்ததாக மாணவர்கள், ஆசிரியர் கூறினர்.
என்.லோகேஷ், கே.வி.எஸ்.,மேல்நிலை பள்ளி, விருதுநகர்: அனைத்து வினாக்களும் எளிதாக இருந்தன. நிச்சயம் 90 மதிப்பெண்ணுக்கு மேல் பெறுவேன். வழக்கமாக 5 மதிப்பெண் கேள்விகள் கடினமாக இருக்கும். ஆனால் இம்முறை துணை பிரிவுகளாக 3 மதிப்பெண், 2 மதிப்பெண் கேள்விகளை இணைத்து 5 மதிப்பெண் கேள்வியாக கேட்டிருந்தனர்.
தாவரவியலில் இருந்து கேட்கப்பட்ட கேள்விகளும் எளிதாக இருந்தது.அதிக மதிப்பெண்களை எதிர்பார்க்கிறேன்.
பி.சினேகா, ஜேசீஸ் மெட்ரிக்.,பள்ளி, சிவகாசி: தேர்வு எளிதாகவே இருந்தது. ஒரு மார்க் கேள்விகள் பரவாயில்லை. தாவரவியல் பாடத்தில் உள்ள ஒரு மார்க், 5 மார்க் உள்ளிட்ட அனைத்து கேள்விகளும் எளிதாகவே இருந்தது. விலங்கியல் பாடத்தில் ஒரே ஒரு 5 மார்க் கேள்வி 'கிரியேடிவாக' இருந்தாலும் எளிமையாகத்தான் இருந்தது. புரிந்து படித்திருந்தால் எளிதில் சென்டம் வாங்கி விடலாம். நேரம் போதுமானதாகவே இருந்தது. மொத்தத்தில் உயிரியல் எளிமையாக இருந்தது.
கிருஷ்ணமூர்த்தி, நவபாரத் மெட்ரிக்., மேல்நிலைப்பள்ளி, ராஜபாளையம்: உயிரியல், தாவரவியல் மூன்று மார்க் பிரிவு கட்டாய கேள்வி ஒன்றில் கிரியேட்டிவாக கேட்டுள்ளனர். இது எதிர்பாராத ஒன்று. விலங்கியல்
பிரிவில் 1, 2 மார்க் கேள்விகளை யோசித்து எழுதும்படி இருந்தது. இருப்பினும் கடந்த ஆண்டு வினாத்தாளை ஒப்பிடும் போது இந்த ஆண்டு மிக எளிதாக இருந்தது.
கவிதா, உயிரியல் ஆசிரியர், ஷத்திரிய பெண்கள் மேல்நிலை பள்ளி, விருதுநகர்: முந்தைய ஆண்டுகளில் உள்ள கேள்வித்தாள்களில் இருந்தே பெரும்பான்மை கேள்விகள் கேட்கபட்டிருந்தன. வழக்கமாக உயிரியல் வினாத்தாளில் மறைமுக கேள்விகள் அதிகமாக இருக்கும். இம்முறை அனைத்து கேள்விகளுமே நேரடி கேள்விகளாக இருந்தன. தேர்வு முடிந்து வந்த மாணவர்களின் முகத்தில் மகிழ்ச்சியை மட்டுமே காண முடிந்தது.