அரசு பள்ளிகளில் வாங்கப்பட்ட நாளிதழ்கள்: விற்பனை செய்ய கல்வித்துறை அறிவுறுத்தல்

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், அரசு செலவில் வாங்கப்பட்ட
நாளிதழ்களை, எடைக்கு விற்பனை செய்து, அத்தொகையை வரைவோலையாக ஒப்படைக்க வேண்டுமென தொடக்கக் கல்வி இயக்ககம் உத்தரவிட்டுள்ளது.
அனைத்து அரசு, அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளுக்கும் 2018-2019 -ஆம் கல்வியாண்டில் மாணவர்களின் பொது அறிவு, மொழித்திறனை வளர்த்துக்கொள்ள பிப்ரவரி, மார்ச் மாதங்களில் அரசு செலவில் தினமும் நாளிதழ்கள் வாங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு வாங்கப்பட்ட நாளிதழ்களை, பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், தங்கள் பகுதியில் உள்ள கடைகளில், எடைக்கு விற்பனை செய்து, அத்தொகையை வரைவோலையாக(டி.டி) மாற்றி, வட்டாரக் கல்வி அலுவலகங்களில் ஒப்படைக்க வேண்டும். பள்ளிகள் அளிக்கும் வரைவோலைகளைப் பெறும் வட்டாரக்கல்வி அலுவலர்கள், அதை, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களிடம் ஒப்படைக்க வேண்டும். அந்த வரைவோலைகளை, சென்னையில் உள்ள தொடக்கக் கல்வி இயக்ககத்தில் நேரடியாக ஒப்படைக்க வேண்டும் என முதன்மை கல்வி அலுவலர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.