எளிது எளிது வேதியியல் தேர்வு வினாக்கள்

சிவகங்கை:பிளஸ் 2 அரசு பொதுத்தேர்வு வேதியியல் பாட வினாக்கள் மிக எளிமையாக இருந்ததாக மாணவர்கள், ஆசிரியர் கருத்து தெரிவித்தனர்.

எஸ்.பிரகதீஷ், ஆக்ஸ்வர்ட் மெட்ரிக் பள்ளி, சூரக் குளம், சிவகங்கை: ஒரு மதிப்பெண் வினாக்கள் அனைத்தும் புத்தகத்திற்கு பின் உள்ள வினாக்களில் இருந்து கேட்கப்பட்டன. அரையாண்டு தேர்வில் கேட்ட வினாக்களிலிருந்து அதிகம் இருந்தன. 2 மற்றும் 3 மதிப்பெண் கேள்விகள் மட்டுமே சற்று கவனமுடன் எழுத வேண்டிய அளவிற்கு கடினமாக கேட்டிருந்தனர். ஐந்து மதிப்பெண் வினாக்களில் கரிமவேதியியல் சார்ந்த கேள்வி மட்டும் சற்று கடினமாக இருந்தது. அனைத்து மாணவர்களும் எளிமையாக எழுதும் வகையில் வினாத்தாள் இருந்தது
.எம்.அங்கயற்கண்ணி, புனித சூசையப்பர் மேல்நிலைப்பள்ளி, சிவகங்கை: ஒரு மதிப்பெண் வினாக்கள் எளிதில் விடை அளிக்கும் விதத்தில், முழுக்க புத்தகத்தில் இருந்தே கேட்கப்பட்டன. புத்தகத்தை முழுமையாக படித்ததால் இத்தேர்வு எளிமையாக இருந்தது. அதே நேரம் 5 மதிப்பெண் கடைசி வினா மற்றும் 2, 3 மதிப்பெண் வினாக்கள் சற்று கடினமாக இருந்தன. அனைத்து தரப்பு மாணவர்களும் தேர்ச்சி பெறலாம். ஆனால் 100 மதிப்பெண் எடுப்பது கஷ்டம்.
பி.கவுரி, அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, சிவகங்கை: ஒரு மதிப்பெண் வினாக்கள் புத்தகத்தின் உள்பகுதியில் இருந்து கேட்கப்பட்டிருந்தன. புத்தகத்தை முழுமையாக படித்திருந்தால் ஒரு மதிப்பெண், 5 மதிப்பெண் வினாக்களுக்கு எளிதில் விடை அளிக்கலாம். 2, 3 மதிப்பெண் வினாக்களும், 5 மதிப்பெண் வினாவில் கடைசி வினா சற்று கடினம்.
எல்.அஜிதா, சாம்பவிகா மேல் நிலைப்பள்ளி, சிவகங்கை: பெரும்பாலும் வினாக்கள் அனைத்தும், மருத்துவ படிப்பிற்கு செல்வதற்கு ஏற்ப 'நீட்' தேர்வு வடிவில் சிந்திக்க கூடிய வினாக்களை தான் புத்தகத்தில் இருந்து எடுத்துள்ளனர். இதன் மூலம் புத்தகத்தை படிப்பதோடு மட்டுமின்றி மாணவர்கள் தானாக பாடத்திற்குள்ளேயே சிந்தித்து பதில் அளிக்கும் விதத்தில் வினாக்கள் இருந்தன.
பள்ளியில் பெரும்பாலும் அன்றாடம் பாடம் நடத்தி முடித்த மறுநாள் வினாக்கள் கேட்டு அதற்கு பதில் அளிக்க கற்றுத்தருவர். புத்தகத்தை முழுமையாக படித்ததால் மிகமிக எளிமையாக இருந்தன.
ஏ.பிரிட்டோ, வேதியியல் ஆசிரியர், மன்னர் மேல்நிலைப்பள்ளி, சிவகங்கை: அரையாண்டு தேர்வுக்கு பின்னர் தான் பிளஸ் 2 மாணவர்களின் வினா நடைமுறையை மாற்றினர். அதில் வேதியியல் பாடத்தில் இருந்து கேட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் புத்தகத்தில் இருந்தே கேட்கப்பட்டன. இது 'நீட்' தேர்வுக்கு ஈடாக மாணவர்களை தரம் உயர்த்தும் நோக்கில் தயாரிக்கப்பட்டுள்ளது.
புத்தகத்தில் இருந்து நேரடியாகவே வினாக்கள் கேட்கப்பட்டதால், எளிமையாக இருந்தது. வினாக்கள் பெரும்பாலும் 'புளுபிரிண்ட்' படியே இருக்கும்.ஆனால் இத்தேர்வில் புளு பிரிண்ட்டை ஒதுக்கிவிட்டு, முற்றிலும் புத்தகத்தில் இருந்து நேரடியான வினாக்கள் கேட்கப்பட்டிருந்தன. மாணவர்களை போட்டி தேர்வுக்கு தயார்படுத்தும் நிலையில் இருந்தன. சாதாரண மாணவர்கள் கூட தேர்ச்சிபெற்று விடுவர், என்றனர்.