பிளஸ் 2 மாணவர்களை கசக்கிய கணிதம், விலங்கியல், வணிகவியல்: நுண் அறிவு திறனுக்கு சவாலான வினாத்தாள்

சென்னை:பிளஸ் 2 கணிதம், விலங்கியல், வணிகவியல் தேர்வுகளில், மாணவர்களின் நுண்ணறிவை பரிசோதிக்கும் கேள்விகள், அதிகம் இடம் பெற்றிருந்தன. அதனால், 'சென்டம்' எடுக்கும் மாணவர்களின் எண்ணிக்கை குறையும் என, ஆசிரியர்கள்
தெரிவித்துள்ளனர்.
பிளஸ் 2 பொது தேர்வில், கணிதம், விலங்கியல் மற்றும் வணிகவியல் உள்ளிட்ட, 10 பாடங்களுக்கு, நேற்று தேர்வு நடந்தது. இந்த ஆண்டு, 'ப்ளூ பிரின்ட்' முறையின்றி, மாணவர்களின் நுண் அறிவை பரிசோதிக்கும் கேள்விகள் இடம் பெற்றன. கணித வினாத்தாளில், பாடத்தின் உள் பகுதிகளில் இருந்து, அதிக கேள்விகள் இடம்பெற்று இருந்தன.
சுற்றி வளைத்த வினாக்கள் இருந்தன.
ஐ.ஐ.டி., மற்றும், ஜே.இ.இ., போன்ற நுழைவு தேர்வுகளில், இடம் பெறுவது போன்ற வினாக்கள் கேட்கப்பட்டிருந்தன.இதுகுறித்து, சென்னை, பி.ஏ.கே.மேல்நிலை பள்ளி ஆசிரியர், ராஜ் கூறியதாவது:
தமிழக பள்ளி கல்வியின் தேர்வு தரத்தை உயர்த்தும் வகையில், வினாக்கள் இடம் பெற்றுள்ளன. ஒரு மதிப்பெண் கேள்விகள் ஏழு, மாணவர்களின் நுண்ணறிவை பரிசோதிக்கும் வகையில் இடம் பெற்று உள்ளன. புத்தகத்தை முழுமையாக புரிந்து படித்து, அதன்படி தேர்வு எழுதியிருந்தால், 'சென்டம்' கிடைக்கலாம்.இவ்வாறு அவர் கூறினார்.
வணிகவியல் வினாத்தாள் குறித்து, சவுகார்பேட்டை, ஏ.பி.பரேக் குஜராத் வித்யாலயா பள்ளி ஆசிரியர், பழனி கூறியதாவது:
வணிகவியல் வினாத்தாளில், 30 சதவீத கேள்விகள், மாணவர்களின், 'சென்டம்' மதிப்பெண்ணை நிர்ணயிக்கும் வகையில் அமைந்துள்ளன. ஒரு மதிப்பெண்ணில், ஐந்து; இரண்டு மதிப்பெண்ணில், நான்கு; மூன்று மதிப்பெண்ணில், நான்கு கேள்விகள், மாணவர்களின் பாட அறிவை ஆய்வு செய்யும் வகையில் இருந்தன.மாணவர்கள் தங்கள் பயிற்சியின் போது, தவிர்க்கும் கேள்விகள் பலவும் இடம் பெற்றன. வினாத்தாளின் தன்மை தரம் மிக்கதாக இருந்தது.இவ்வாறு அவர் கூறினார்.
விலங்கியல் வினாத்தாளில், 'நீட்' தேர்வுக்கு தயாராகும் வகையிலான கேள்விகள் இடம் பெற்றன. இதுகுறித்து, சென்னை புரசைவாக்கம், எம்.சி.டி.எம்., மேல்நிலை பள்ளி ஆசிரியர்கள், இளங்கோ மற்றும் சவுந்தரபாண்டியன் கூறியதாவது:
விலங்கியல் கேள்விகள் பெரும்பாலும், புத்தகத்தில் உள்பகுதியில் இருந்து, இடம்பெற்று உள்ளன. மாணவர்களுக்கு, 33 சதவீத கேள்விகள் கடினமாக இருந்தன. கேள்வி - பதில்கள் மட்டுமின்றி, பாடங்களை புரிந்து படித்தவர்கள், முழுமையான மதிப்பெண் பெற முடியும். தேர்ச்சிக்கு பாதிப்பு இருக்காது என்றாலும், 'சென்டம்' பெறுவது, சவாலாக இருக்கும். புரிந்து படிக்காமல், பாடங்களை மனப்பாடம் செய்து படித்திருந்தால், மதிப்பெண் குறையும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.