'சூப்பர் ஸ்பெஷாலிட்டி' மருத்துவ படிப்பு தமிழகத்தில் 2 கல்லுாரிகளில் அனுமதி

கோவை, தமிழகத்தில், இரு அரசு மருத்துவக் கல்லுாரிகளில், 'சூப்பர்ஸ்பெஷாலிட்டி' மருத்துவப் படிப்புகளை துவங்க, இந்திய மருத்துவக் கவுன்சில் அனுமதி
அளித்துள்ளது.நாடு முழுவதும் உள்ள மருத்துவக்கல்லுாரிகளில், மருத்துவ பாடப்பிரிவுகளை துவங்க, இந்திய மருத்துவக் கவுன்சிலிடம் அனுமதி பெறவேண்டியது அவசியம்.தமிழகத்தில் உள்ள பல்வேறு அரசு மருத்துவக் கல்லுாரிகள், 'மல்டி ஸ்பெஷாலிட்டி' மருத்துவப் படிப்புகளை துவங்க, குறிப்பிட்ட கால இடைவெளியில் விண்ணப்பித்து வருகின்றன.இந்திய மருத்துவக் கவுன்சில், அதற்கான வசதிகள் குறித்து, ஆய்வு செய்து அனுமதி அளிக்கும்.இந்நிலையில், தமிழகத்தின் இரு மருத்துவக் கல்லுாரிகளில், 'சூப்பர் ஸ்பெஷாலிட்டி' மருத்துவ பாடப்பிரிவுகளை துவங்க அனுமதி அளித்துள்ளது.சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது:தமிழகத்தில், கோவை மற்றும் செங்கல்பட்டு மருத்துவக் கல்லுாரிகளில், மூன்று பாடப்பிரிவுகளுக்கு, தலா, நான்கு இடங்களை துவங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.கோவை அரசுமருத்துவக் கல்லுாரியில்,இதயம், நரம்பியல்,குடல் மற்றும் இரைப்பை ஆகிய துறைகளில், 'சூப்பர் ஸ்பெஷாலிட்டி' மருத்துவ பாடப்பிரிவுகளை துவங்க அனுமதிவழங்கப்பட்டுள்ளது.இதன் வாயிலாக, பக்கவாதம் உட்பட, நோய்களுக்கு கூடுதல் நிபுணத்துவ டாக்டர்கள் கிடைப்பர்.நோயாளிகளுக்கு விரைந்து சிகிச்சை அளிக்க முடியும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.