பிளஸ் 2 தேர்வு பணி ஆசிரியர்கள் இரவோடு இரவாக திடீர் மாற்றம்

அரசு தேர்வு துறை உத்தரவை மீறி, பிளஸ் 2 தேர்வு கண்காணிப்பு ஆசிரியர்கள், இரவோடு இரவாக, திடீர் மாற்றம் செய்யப்பட்டது, பல சந்தேகங்களை ஏற்படுத்தி உள்ளது.
பிளஸ் 2 பொது தேர்வு, நேற்று துவங்கியது. தேர்வை முறைகேடின்றி நடத்த, அரசு தேர்வு துறையால், விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.
மாவட்ட மற்றும் மண்டல அளவில், 23 உயர் அதிகாரிகள் தலைமையில், 44 ஆயிரம் ஆசிரியர்கள் மற்றும் துறை அலுவலர்கள், தேர்வு கண்காணிப்பு பணிக்கு நியமிக்கப்பட்டனர்.
 அவர்களுக்கு, குலுக்கல் முறையில், பணியிட ஒதுக்கீடு வழங்கப்பட்டு, அதற்கான, 'பார்கோடு' அடங்கிய, அடையாள அட்டைகளையும், தேர்வு துறை வழங்கியிருந்தது.
ஆனால், நேற்று முன்தினம் இரவில், அனைத்து மாவட்டங்களிலும், கண்காணிப்பு பணிக்கு நியமிக்கப்பட்ட, 60 சதவீத ஆசிரியர்கள், மாவட்ட கல்வி அதிகாரிகளால், வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
 
அதிருப்தி
அதிகாரிகளின் சிபாரிசு பெற்றவர்களுக்கு, அவர்கள் விரும்பிய அல்லது அருகில் உள்ள, தேர்வு மையங்கள் வழங்கப்பட்டுள்ளன.
 இந்த மாற்றம், பள்ளி ஆசிரியர்கள் இடையே குழப்பத்தையும், அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது.திடீரென, புதிய இடம் வழங்கப்பட்டதால், தேர்வு மையங்களை தேடி பிடித்து, ஆசிரியர்கள் பணிக்குச் செல்ல தாமதமானது.